July 17, 2021
தண்டோரா குழு
ஆடி முதல் நாளை முன்னிட்டு கூட்டமாக காணப்படும் பிரசித்திபெற்ற கோவை பேரூர் படிதுறையில் மக்கள் வருகை குறைவாகவே இருந்தது.
முக்தி தலம் என்று அழைக்கப்படும் கோவை பேரூரில் புகழ்பெற்ற பட்டீசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே செல்லும் நொய்யல் ஆற்றில் படித்துறை உள்ளது. இந்த ஆற்றின் படித்துறையில் இறந்தவர்களுக்கு திதி கொடுத்தால் அவர்களுக்கு மறுபிறவி இல்லை என்றும், அவர்கள் ஈசனிடம் சென்று விடுவார்கள்என்பதும் ஐதீகம்.இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கு அன்று இந்த படித்துறையில் இறந்தவர்களுக்கு திதி கொடுக்க ஏராளமான பக்தர்கள் வந்து திதி கொடுத்து தர்ப்பண பூஜை செய்வது உண்டு.
கோவை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர், நீலகிரி, கேரளாவில் இருந்தும் இதற்காக முந்தைய நாளே பக்தர்கள் பேரூருக்கு வந்து விடுவார்கள். கடந்தாண்டு கொரோனா பொதுமுடக்கத்தால், பேரூர் படித்துறையில் ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்குக்கு ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், அன்றைய தினம் அங்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு எந்த கட்டுப்பாடும் இல்லாத நிலையிலும், மக்கள் வருகை மிக குறைந்த அளவிலேயே வந்தனர்.
கொரோனா காரணமாக கூட்டத்தை தவிர்த்து 5 நபர்கள் மட்டுமே திதி கொடுக்க பங்கேற்கவும், குறிப்பிட்ட இடைவெளி விட்டே, முககவசம் அணிந்து தான் பூஜைகள் நடைபெறுவதாகவும், பேரூரில் திதி கொடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது தொடர்பான தகவல் தெரியாததால் மக்கள் கூட்டம் குறைவாக உள்ளதாக சொல்கின்றனர் கோவில் அதிகாரிகள்.
படிதுறைக்கு அருகிலுள்ள அம்மன் தோப்பு பகுதி மற்றும் ஆற்றுமேடை விநாயகர் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் முன்னோர்களுக்கு வழங்கக்கூடிய தர்ப்பணமும், பரிகார பூஜைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.