August 24, 2018
தண்டோரா குழு
ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை, முல்லைப் பெரியாறு அணையில், 139புள்ளி99 அடிக்கு மேல் நீர் தேக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்குமாறு தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதினார். ஆனால் அணை பாதுகாப்பாக உள்ளது நீர்மட்டத்தை குறைக்க தேவையில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் தெரிவித்தார். இதற்கிடையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 139 அடியாக குறைக்க வேண்டும் என்று கேரளாவைச் சேர்ந்த ரசல் ஜாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக கேரளா மற்றும் தமிழக அரசுகள் தரப்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரின் காரணமாகவே கேரளாவில் மழை வெள்ளம் ஏற்பட்டதாக கேரள அரசு தரப்பில் கூறப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு தமிழக அரசு காரணம் இல்லை. முல்லை பெரியாறு அணையில் இருந்து குறைவான டிஎம்சி அளவு நீரே வெளியேற்றப்பட்டது. அதற்கு முன்னதாகவே இடுக்கி அணையில் இருந்து கேரள அரசு வெளியேற்றிய நீரின் அளவு அதிகமாக இருந்ததும், அங்கு ஏற்பட்ட மழையில் காரணமாகவே கேரளாவில் வெள்ளப் பெறுக்கு ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, இரு மாநிலத்தின் மனுக்களையும் விசாரித்த உச்ச நீதிமன்றம், முல்லைப் பெரியாறு அணையில் 139.99 அடி வரை மட்டுமே நீரினை தேக்கிக் கொள்ளலாம் என்று தமிழக அரசுக்குஉச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.