March 10, 2018
தண்டோரா குழு
சென்னை கே.கே நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி அஸ்வினி. நேற்று வகுப்பு முடிந்து வீடு திரும்பிய போது, அவரை கல்லூரி வாயிலில் அழகேசன் என்பவர் கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த அஸ்வினியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, அழகேசனை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இன்று சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மாணவி அஸ்வினியின் உடற்கூறாய்வு தொடங்கியது. சட்டம் சார்ந்த உதவி பேராசிரியர் கார்த்திகாதேவி முன்னிலையில் மாணவி அஸ்வினியின் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், மாணவி அஸ்வினியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அஸ்வினியின் படிப்பிற்கு அழகேசன் எந்த பணமும் அளிக்கவில்லை என்றும் அழகேசனின் குடும்பத்தினர் இங்கு வரும் வரை அஸ்வினி உடலை வாங்க மாட்டோம் என்றும் அஸ்வினியின் உறவினர்கள் கூறியுள்ளனர். அஸ்வினியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக ஏற்கனவே புகார் அளித்தும் மதுரவாயல் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.