April 7, 2021
தண்டோரா குழு
கோவை கூட்செட் சாலை வழியாக அவினாசி மேம்பாலம் சாலை செல்கிறது. இதில், மேம்பாலத்தின் சர்வீஸ் சாலையில் இடதுபுறம் திடீரென கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி 3 அடி ஆழம் பள்ளம் தோன்றியது.
அவினாசி மேம்பாலம் அருகே உள்ள சாலைகளின் வழியாக பாதாள சாக்கடை செல்கிறது.இதில், 600 மி.மீ அளவிலான பழைய பாதளா சாக்கடை குழாய் உடைந்து இந்த பள்ளம் ஏற்பட்டது. இதனை அகற்றி 40 மீட்டர் தூரத்திற்கு புதிய குழாய் பதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த பணிகள் நிறைவடைந்தன.
இதனிடையே இந்த பள்ளத்தை சீரமைக்கும் பணிகள் முடிந்தாலும் அதன் மீது சாலை அமைக்கும் பணிகள் இன்னமும் துவங்கப்படவில்லை.பள்ளம் சீரமைக்க தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டு அதன் மீது சாலை அமைக்கப்படாமல் உள்ளதால் கூட்செட் வழியாக நஞ்சப்பா சாலை, அவினாசி சாலை, புரூக் பாண்ட் சாலை போன்ற பகுதிகளுக்கு செல்லும் மக்கள் மேம்பாலம் கீழ் பகுதி சர்வீஸ் சாலை வழியாக செல்ல முடியாமல், மேம்பாலத்தின் மேல் பகுதியில் தான் செல்ல முடிகிறது. இதனால் அவினாசி மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் உண்டாகுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,‘‘பாதாள சாக்கடையில் ஏற்பட்ட பள்ளம் சீரமைக்கப்பட்டுள்ளது.விரைவில் அதன் மீது சாலை அமைக்கும் பணி துவங்கும்,’’என்றனர்.