May 19, 2018
தண்டோரா குழு
கர்நாடகாவில் போதிய MLA-க்களின் ஆதரவு இல்லாததால் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்னதாகவே முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார்.
கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு ஆட்சி அமைக்க போதுமான எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தும் பாஜகவின் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கர்நாடக ஆளுநர் அழைப்பு விடுத்தார். இது பெரும் சர்ச்சையை ஏறப்படுத்தியது. இதுமட்டுமின்றி,எடியூரப்பா தனது மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்கபட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி கா்நாடகாவில் வெற்றி பெற்ற 222 சட்டமன்ற உறுப்பினா்களும் இன்று காலை 11 மணிக்கு பதவியேற்றுக் கொண்டனா். சட்டமன்ற உறுப்பினா்கள் அனைவருக்கும் தற்காலிக சபாநாயகா் கே.ஜி.போபையா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர், உணவு இடைவேளைக்கு பின் கர்நாடக சட்டப் பேரவை 3.30 மணிக்கு கூடியது. மீதமிருந்த புதிய MLA-க்கள் உறுதி மொழி ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது.
அப்போது கர்நாடக சட்டமன்றத்தில் அரை மணி நேரத்திற்கும் மேலாக எடியூரப்பா உருக்கமாக பேசினார்.
அப்போது பேசிய எடியூரப்பா,
கர்நாடக மக்கள் எனக்களித்த ஆதரவை மறக்க முடியாது. பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தான் தம்மை முதல்வர் வேட்பாளராக்கினார்கள். காங்கிரஸின் மோசமான ஆட்சிக்கு எதிராக பெரும்பாலான மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால் மக்களின் தீர்ப்புக்கு எதிராக காங்கிரசும், மஜதவும் ஒன்று சேர்ந்துள்ளன. எனது கடைசி மூச்சு இருக்கும் வரை கர்நாடக மாநில மக்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் நான் போராடுவேன். பாஜக தனிப்பெரும் கட்சி என்பதாலேயே ஆளுநர் தங்களை அழைத்து ஆட்சி அமைக்க சொன்னார். ஆனால் காங்கிரஸ் – மஜத திடீர் கூட்டணி அமைத்த மக்களின் தீர்ப்பை அவமதித்து விட்டது. கர்நாடக மக்கள் பாஜக-வுக்கு சட்டப்பேரவையில் 104 இடங்களை தந்ததற்கு பதிலாக 113 இடங்களை தந்திருந்தால் கர்நாடகாவை சொர்க்க பூமியாக மாற்றியிருப்பேன் எனக் கூறினார்.
பின்னர் தொடர்ந்து உருக்கமாக பேசிய அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ராஜினாமா செய்வதாக அறிவித்து விட்டு உடனடியாக பேரவையை விட்டு வெளியேறினார் எடியூரப்பா.
கர்நாடகாவில் எடியூரப்பா 57 மணி நேரம் மட்டுமே முதல்வராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.