January 11, 2021
தண்டோரா குழு
கோவையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகுந்த 100க்கும் மேற்பட்டோர் அலுவலரை மிரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை டவுன்ஹால் பகுதியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு திடீரென வந்த 100க்கும் மேற்பட்டோர் அலுவலகத்திற்குள் புகுந்து அலுவலரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து மாவட்ட முதன்மை அலுவலர் உஷா கூறுகையில்,
கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தியாகி என்.ஜி ராமசாமி பள்ளியின் தலைமை ஆசிரியர் சதாசிவன் மீது பள்ளி கட்டணம் வசூல் செய்து பல லட்சம் மோசடி செய்ததாக குறித்து புகார் அளிக்க பட்டதாகவும், அந்த புகார் மீது தனி அலுவலர் நியமிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார் .மேலும் இந்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் வந்து வாக்கு வாதம் செய்து மிரட்டியதாக கூறினார்.
இதனால் இந்த அலுவலகத்திற்கும், அலுவலக ஊழியருக்கும், தனக்கும் பாதுகாப்பு வேண்டும் என்று தெரிவித்தார். இதனால் அரசு கல்வி அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.