November 5, 2020
தண்டோரா குழு
அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோவை மாவட்ட பாமகவினர் ஊக்கத்தொகை வழங்கினர்.
தமிழகத்தில் நீட் தேர்விற்கான எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக கோவையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
கோவை கணபதி பகுதியிலுள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் அரசு பள்ளியில் மட்டுமே பயின்று கடினமான நீட் தேர்வினை எதிர்கொண்டு நல்ல மதிப்பெண்கள் பெற்ற 20 மாணவ மாணவிகளுக்கு பாமக மாநில துணை பொதுச்செயலாளர் கோவை ராஜ், மாநில இளைஞரணி துணை செயலாளர் அசோக்ஸ்ரீநிதி மற்றும் பாமாகவினர் சார்பாக தலா ரூ.5000 ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கபட்டதுடன் அம்மாணவ மாணவிகளின் கல்விக்காக உழைத்திட்ட பெற்றோர்களும் கெளரவிக்கபட்டனர்.
மேலும் அடுத்த ஆண்டு நீட் தேர்விற்கு பயிற்சி பெரும் மாணவர்கள் 20பேருக்கு உதவித்தொகையாக தலா ரூ.2,500 வழங்கபட்டது. இந்நிகழ்வு தொடர்பாக பேசிய மாநில இளைஞரணி துணை செயலாளர் அசோக்ஸ்ரீநிதி தனியார் பள்ளி மாணவர்கள் நீட் சிறப்பு வகுப்புகள், பயிற்சி வகுப்புகள் என பலலட்சம் பணம் கட்டி படிக்கின்றனர் என்றார், வட மாநில மாணவர்கள் 6ம்வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அடிப்படை பாடத்திட்டம் என்ற பெயரில் 6வருடம் இதற்காக பலலட்சம் செலவழித்து படிப்பதாகவும் தெரிவித்தவர் நமது அரசு பள்ளி மாணவர்கள் ஒரு ஆண்டு மட்டுமே இந்த நீட் தேர்விற்காக பயிற்சி பெற்று கடந்த நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளனர் என்றார். மேலும் அவர்களை யாரும் கண்டுகொள்வதில்லை, இதனை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களையும் கெளரவப்படுத்த வேண்டியே இந்த நிகழ்ச்சி பாமக சார்பில் நடத்தப்பட்டு ஊக்கத்தொகை வழங்கியதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர்கள் கோவை ரமேஷ், செந்தில் ராஜா, மாவட்ட தலைவர் சிங்கை சரவணன், மாநில மகளிர் சங்க துணைச் செயலாளர் ஜெயலட்சுமி, மாநில இளைஞர் சங்க துணைத் தலைவர்கள் மடத்தூர் ரமேஷ், லக்ஷ்மிநாராயணன், புறநகர் தெற்கு மாவட்ட தலைவர் பொள்ளாச்சி பட்டாபிராமன், மாநகர் மாவட்ட அமைப்பு தலைவர் கண்ணன் மற்றும் அனைத்து நிலை பொருப்பாளர்கள் கலந்துகொண்டனர்.