November 19, 2020
தண்டோரா குழு
வாக்காளர் திருத்த சிறப்பு முகாம்களில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி முகவர்கள் பின்பற்ற கூடிய நடைமுறைகள் குறித்தான ஆலோசனை கூட்டம் கோவையில் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி கோவையில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கு.இராசமணி அண்மையில் வெளியிட்டிருந்தார்.இதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் நவம்பர் 21,22 தேதிகள் மற்றும் டிசம்பர் 12,13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் கவுண்டம்பாளையம், கோவை வடக்கு,மேட்டுப்பாளையம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட முகாம்களில் கலந்து கொள்ளும் அரசியல் கட்சியினர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசணை கூட்டம் கோவை வடக்கு கோட்டாச்சியர் சுரேஷ் தலைமையில் கவுண்டம்பாளையம் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க., தி.மு.க. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பா.ஜ.க ,மற்றும் தேசிய வாத காங்கிரஸ்,உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய வடக்கு கோட்டாச்சியர் சுரேஷ்,
அரசியல் கட்சிகளால் நியமிக்கப்படும் முகவர்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களில் வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை சரிபார்க்க வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு உதவி புரியலாம் எனவும்,மேலும் இதில் முகவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விரிவாக பேசினார்.இந்த கூட்டத்தில் கோவை வடக்கு வட்டாட்சியர் மகேஷ் குமார், மேட்டுப்பாளையம் வட்டாச்சியர் சாந்தாமணி,அன்னூர் வட்டாச்சியர் சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.