• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசாங்க அதிகாரியிடம் இருந்து சொத்தை மீட்டுத்தரக் கோரி மனு

February 28, 2017 தண்டோரா குழு

அரசாங்க அதிகாரியிடமிருந்து தனது சொத்தை மீட்டு தரக்கோரி மணிகண்டன் என்பவர் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் புகார் மனு அளித்துள்ளார்.

கோவை மாவட்டம் ஜோதிபுரம், அம்மாசைக் கவுண்டர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். அப்பகுதியில் மளிகைக் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். கோவை மாவட்டம் கணபதி அருகே கட்டபொம்மன் வீதியில் வசித்து வரும் செல்வன் என்பவரிடம் குடும்ப செலவிற்காக 2௦15-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி ரூ. 12 லட்சம் கடனாக வாங்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

செல்வன் திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் பகுதியில் உள்ள வேளாண்மைத் துறையில் கள அலுவலராகப் பணியாற்றி வருகிறார். செல்வனிடம் மணிகண்டன் கடன் பெறும் போது மணிகண்டனின் இல்லம் “நம்பிக்கை கிரயம்” என்ற பெயரில் அளிக்கப்பட்டது. அந்தச் சொத்து செல்வனின் மனைவி லட்சுமி பெயரில் பெரியநாயக்கன்பாளையம் சார் பதிவாளார் அலுவலகத்தில் கிரயம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மணிகண்டன் தான் வாங்கிய ரூ.12 லட்சம் கடனுக்காக மாதம் ரூ 48 ஆயிரம் கந்து வட்டியை 13 மாதங்களாக செல்வனுக்குச் செலுத்தி வந்துள்ளார். கடந்த மூன்று மாத காலமாக கந்து வட்டி கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் கடன் தொகையும் வட்டித் தொகையையும் சேர்த்து செலவனிடம் கொடுக்கச் சென்றார் மணிகண்டன்.

அப்போது செல்வன், “ஏற்கனவே சொத்தினை (மணிகண்டன் இல்லம்) எனது மனைவி லட்சுமி பெயரில் கிரயம் செய்து கொடுத்துவிட்டீர்கள். இனி அதைப் பற்றி கேட்கக் கூடாது” என்று மணிகண்டனிடம் கூறியுள்ளார்.

இது குறித்து மணிகண்டன் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில்,

“எனது சொத்தின் தற்போதைய மார்க்கெட் விலை ரூ. 5௦ லட்சம். செல்வன் என்னிடம் ஏமாற்றி கிரயம் செய்துகொண்டார். கடன் மற்றும் வட்டி தொகையைத் திருப்பிக் கொடுக்க வந்தால், அதனை வாங்க மறுத்து, எனது சொத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார். அரசாங்க அதிகாரியாக இருந்து கொண்டு இப்படி பலரிடம் சொத்துகளை வாங்கி தனது மனைவி பெயரில் பதிவு செய்து மோசடி செய்து வருகிறார்” என்று குறிப்பிட்டார்.

இது குறித்து அரசு அதிகாரி செல்வனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது,

“அந்தச் சொத்து எனது மனைவி லட்சுமி வாங்கியது. அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார்.கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ள மணிகண்டன், “என்னைக் கந்து வட்டி கொடுமையிலிருந்து காப்பாற்றி, சொத்தை மீட்டுத் தர வேண்டும்” என்று கோரியுள்ளார்.

மேலும் படிக்க