May 21, 2018
தண்டோரா குழு
அமைச்சர் எஸ்.பி வேலுமணி காவல்துறையை ஏவல் துறையாக்கி, தன் கட்சி தொண்டர்கள் மீது பொய் வழக்கு பதிந்துள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கக்கூடிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்களை டிடிவி தினகரன் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற தனது கட்சி தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தூண்டுதலால், காவல்துறை 58 நபர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளது. அமைச்சருக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக எனது கட்சியின் அடுத்த கூட்டம், தொண்டாமுத்தூர் தொகுதியில் நடத்த இருக்கிறோம்.பொய் வழக்கு போட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் சட்டப்படி வழக்கு தொடுக்கப்படும். கச்சா எண்ணெய் விலை உயரும் பொழுது, பெட்ரோல்,டீசல் விலையை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்கள், விலை குறையும் பொழுது அதையேன் குறைப்பதில்லை என மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களை கண்டிப்பதில்லை என்றார்.
மேலும்,அம்மாவால் ஓரங்கட்டப்பட்டவர் டிடிவி என எஸ் பி வேலுமணி கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், ஆர்கே நகர் இடைத்தேர்தலில், தனக்காக தன் பின்னால் நின்று வாக்கு கேட்ட எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி வேலுமணிக்கு இது முன்னரே தெரியாதா என கேள்வி எழுப்பினார். குமாரசாமிக்கு வாழ்த்து சொல்லாதது ஏன் என்ற கேள்விக்கு, தமிழகத்தின் உண்மையான காவிரியை பெற்று தருவது தான் முதல் தேவை என்றார்.