May 28, 2018
தண்டோரா குழு
அப்பாவி மக்களின் ரத்தம் குடித்த இம்மாதிரியான போராட்டங்கள் தொடரக்கூடாது என ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் இயக்குகி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பல நாட்களாக போராட்டம் நடந்து வந்தது. கடந்த 22ம் தேதி நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதனால் போலீசார் போராட்டத்தை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி இன்று பிற்பகல் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கூட்டத்தில், துணை முதல் அமைச்சர் ஒ பன்னீர் செல்வம் உள்பட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர், பொதுமக்களின் உணர்வுகள், கருத்துக்களுக்கு மதிப்பளித்து ஆலையை நிரந்தரமாக மூட ஆணையிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில், அதிகாரிகள் ஆலைக்கு சீல் வைத்தனர். மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான, தமிழக அரசின் அரசாணை, ஆலையின் நுழைவு வாயிலில் உள்ள கதவில் ஒட்டப்பட்டது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூடபட்டது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு சமர்ப்பணம்; அப்பாவி மக்களின் உயிர்க்குடித்த போராட்டங்கள் வருங்காலத்தில் தொடரக்கூடாது எனக் கூறியுள்ளார்.