April 19, 2018
தண்டோரா குழு
ராமேசுவரத்தில் அப்துல் கலாம் பயின்ற அரசுப் பள்ளியில் 2 ஆண்டுகளாக மின்கட்டணம் செலுத்தப்படாததால் மின் இணைப்பினை மின்வாரிய அதிகாரிகள் இன்று(ஏப் 19)துண்டித்தனர்.
மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ராமேசுவரம் வர்த்தகன் தெருவில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலும் படித்தார். மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளால் பராமரிக்கப்பட்டு வரும் இந்த பள்ளி தரம் உயர்த்தப்பட்டு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மின்சார கட்டணம் செலுத்தப்படாமல் உள்ளதையடுத்து இன்று பள்ளிக்கு சென்ற மின்வாரியத்துறை அதிகாரிகள் பள்ளியின் மின்இணைப்பை துண்டித்தனர்.இதனால் மாணவ மாணவிகள் மின்சாரம் இல்லாமல் அவதி அடைந்துள்ளனர்.இதனையடுத்து கல்வி மேலாண்மைக் குழு மின் கண்டணத்தை கட்டுவதாக உறுதியளித்ததையடுத்து மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.