December 5, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் ஃபவுண்டேஷன் (சொர்கா ஃபவுண்டேஷன்) சார்பில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இதில் பேசிய அவர், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்திட வேண்டும் என்ற நோக்கோடு முதல்வர் செயல்பட்டு வருகின்றார் எனவும் வீடுவாரியாக சென்று மாற்றுத்திறனாளிகள் பட்டியலை தயாரித்து அவர்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றும் அரசாக இந்த அரசு செயல்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு 1கோடியே 13 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அமைச்சர்,
முதல்வரின் வழிகாட்டுதலின்படி இன்றைய தினம் 1 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நேற்று கோவை மாவட்டத்தில் 45 நிமிடம் பெய்த கன மழையில் 71மிமீ கனமழை பெய்துள்ளதாகவும் இதனால் கோவையில் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கையின் காரணமாக தற்போது போக்குவரத்தை சீர் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் கோவை மாவட்டத்தில் மழை காலங்களுக்காக திட்ட வரைவு அறிக்கை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அது முடிந்த பின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார். மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். அதிமுக எம்எல்ஏக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் தந்த டெண்டர் விபரங்கள் தெளிவாக இல்லை எனவும் அதில் முரண்பாடுகள் தனக்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதே சமயம் கடந்த காலங்களில் செய்த தவறுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார். கடந்த ஆட்சியின் பொழுது பல பணிகள் துவங்கப்படவில்லை எனவும் அதற்கு காரணம் நிதி ஆதாரம் இல்லை என்பதுதான் எனவும் தெரிவித்த அவர் கடந்த ஆட்சியின் பொழுது டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள் நிதி இல்லை என்பதால் பணிகளை விட்டு விட்டுச் சென்றிவிட்டதாக தெரிவித்தார்.
தேர்தல் நேரங்களில் தீர்மானங்கள் இல்லாமல் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாக தெரிவித்த அவர் தேர்தலுக்கு முன்னரே சாலைகள் பராமரிக்க வேண்டும் என்ற சிந்தனை ஏன் கடந்த ஆட்சியாளர்களுக்கு வரவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.
தற்பொழுது முதல்வர் 200 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீரால் சேதமடைந்த சாலைகளை சீர் செய்ய நிதி அளித்து இருப்பதாகவும் 20 கோடி ரூபாய் செலவில் தெருவிளக்குகள் அமைக்கும் பணிக்காக அளித்திருப்பதாகவும் தெரிவித்தார். சூயஸ் திட்டம் குறித்து விரிவான அறிக்கை தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மலைவாழ் மக்களின் அன்றாடத் தேவைகளான மின்சாரம், சாலை வசதிகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் பயனாளர் அட்டைகள் பெறுவதில் உள்ள சிரமங்களை களைவதற்கு வீடு வாரியாக ஆய்வு மேற்கொண்டு கணக்கெடுக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.