August 8, 2018
தண்டோரா குழு
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கடந்த 11 நாட்களாக, உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (ஆக.7) மாலை 6.10 மணிக்கு காலமானார்.
இதையடுத்து, நேற்று நள்ளிரவு கோபாலபுரம் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட கருணாநிதி உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். பின் சிஐடி காலனி வீட்டிற்கும் கொண்டு செல்லப்பட்டு பின்னர், அதிகாலை ராஜாஜி ஹாலில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும்,திரையுலகினரும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் கருணாநிதி உடல் ஏற்றப்பட்டது.அங்கிருந்து, மாலை 4 மணிக்கு இறுதி ஊர்வலம் துவங்கியது. செல்லும் வழியெங்கும் தொண்டர்களின் விண்ணை முழக்கும் சப்தத்துடன் கலைஞரின் உடல் சிவானந்தா சாலை, வாலஜா சாலை வழியாக, மாலை 6.15 மணிக்கு மெரினா வந்தடைந்தது.
அங்கு, முப்படை வீரர்கள் கருணாநிதி உடலை எடுத்து வந்து இறுதி மரியாதை செய்தனர். தேசியக்கொடியை ஸ்டாலினிடம் வீரர்கள் கொடுத்தனர். இதனையடுத்து, குடும்பத்தினர் கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கலைஞரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. முப்படை வீரர்களும் கலைஞரின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்,இதன்பின்னர் அவரின் உடல் சந்தன பேழையில் வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது கூடி இருந்த தொண்டர்கள் வாழ்க வாழ்க டாக்டர் கலைஞர் என விண்ணை பிளக்கும் அளவிற்கு கோஷங்களை எழுப்பினர்.
திமுக தலைவர் கலைஞர் இறந்து 16 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.