September 18, 2021
தண்டோரா குழு
கோவை ரெட்பீல்டில் கடந்த 1965-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந் தேதி ஐ.என்.எஸ். அக்ரானி கடற்படை பயிற்சி மையம் தொடங்கப்பட்டது.
நாட்டில் உள்ள கடற்படை பயிற்சி மையத்தில் முதன்மையான பயிற்சி மையமாக கோவை அக்ரானி பயிற்சி மையம் விளங்குகிறது. இந்த மையத்தின் 56-ம்ஆண்டு விழா மைய வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
பயிற்சி மைய கட்டளை அதிகாரி சி.எம்.டி. அசோக் தலைமை தாங்கி பேசியதாவது:-
ஐ.என்.எஸ். அக்ரானி மையத்தில் கடற்படையின் உயர் அதிகாரிகளுக்கு தரமான தலைமை மற்றும் மேலாண்மை பயிற்சி வழங்கி வருகிறது. இவர்கள் ஒரு வலுவான கடற்படை அடித்தளத்தை உருவாக்குகின்றனர்.இவர்களை சீர்படுத்துவதிலும், சிறந்த தலைவராக உருவாக்குவதிலும் ஐ.என்.எஸ். அக்ரானி முக்கிய பங்கு வகிக்கிறது.
இங்கு அளிக்கப்படும் பயிற்சி அவர்களை உயர் மற்றும் முக்கிய பொறுப்புகளை வகிக்க உதவுகிறது இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து ஆண்டு விழாவை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாப்பட்டது.இதில் கடற்படை அதிகாரிகள், வீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர்.