• Download mobile app
20 Apr 2019, SaturdayEdition - 1165
FLASH NEWS
  • 12 சிறை கைதிகளின் பாதங்களை கழுவிய போப் ஆண்டவர்…
  • அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணமில்லை: தேவகவுடா
  • தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 1,281 பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளன

பற்றாக்குறையும்; கடன்களும் நிரம்பி வழியும் 2019-2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் – தினகரன் விமர்சனம்

February 8, 2019

இந்திய அளவில் அதிக வருவாய் பற்றாக்குறை உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்டிருக்கிற நிலையில், வருவாயைப் பெருக்குவதற்கான ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை என அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

பட்ஜெட் குறித்து தினகரன் வெளியிட்ட அறிக்கையில்,

மாநில உரிமைகளைப் பறித்து மத்திய அரசு எந்தளவுக்குத் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது என்பதை அவர்கள் தயவில் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கும் தமிழக அரசே கொடுத்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலமாக பட்ஜெட் அமைந்துள்ளது. பற்றாக்குறையும், கடன்களும் நிரம்பி வழியும் 2019-2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பல இடங்களில் மத்திய அரசு எப்படி எல்லாம் தமிழகத்தை ஓரவஞ்சனை செய்து வருகிறது என்று சொல்லி புலம்பியிருக்கிறார். ஜிஎஸ்டி வரிவிதிப்பில் அதிகம் வசூலித்துக் கொடுக்கும் தமிழகத்திற்கு மத்திய அரசு நியாயமான நிதிப்பகிர்வை அளிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். மத்திய அரசு நிதியைக் குறைத்து தமிழகத்திற்குத் தொடர்ந்து அநீதி இழைத்து வருவதாகவும், இதனால் இந்தியாவிலேயே 30% அளவுக்கு வளர்ச்சி பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும் பட்ஜெட்டில் பட்டவர்த்தனமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த உதய் திட்டத்தை இவர்கள் ஒப்புக்கொண்டதால் 22 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக தமிழகத்திற்கு நிதிச்சுமை ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதே போல மாநிலங்களின் வரிவிதிப்பு உரிமைகள் பறிப்பு, மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டங்களுக்கான நிதி அளவு குறைப்பு என தமிழகத்தின் நிதி நிலை மோசமாகி இருப்பதற்கான காரணங்களும் அதில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அனைவருக்கும் கல்வி இயக்கம், இடைநிற்றல் கல்வி இயக்கம் ஆகியவற்றுக்கான நிதியை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கவில்லை என்றும் நிதியமைச்சர் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்கும் தொகை ரூ.4 ஆயிரத்து 400 கோடி என்று கூறப்பட்டிருக்கிறது. இப்படி சட்டப்பேரவையில், அதுவும் அரசின் பட்ஜெட்டிலேயே அளிக்கப்பட்டிருக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தின் படி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் தமிழகத்தையும், தமிழக மக்களையும் பற்றி கவலைப்படாமல், மத்திய அரசின் அடிவருடியாக இருந்து கொண்டு தனிப்பட்ட சுயலாபங்களுக்காக மாநிலத்தின் நலன்களை மொத்தமாக அடகு வைத்துவிட்டார்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது. ஆனால் வார்த்தைக்கு வார்த்தை ‘இது ஜெயலலிதாவின் ஆட்சி’ என்று சொல்லி மக்களை ஏமாற்ற முனைந்திருக்கிறார்கள்.

இவர்கள் என்ன சொன்னாலும் ஜெயலலிதா கட்டி காப்பாற்றி வந்த தமிழ்நாட்டின் உரிமைகள், தமிழர்களின் நலன்கள் ஆகியவற்றைக் காவு கொடுத்துவிட்டு, டெல்லிக்கு காவடி தூக்கிக்கொண்டிருக்கும் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தை மன்னிக்க தமிழக மக்கள் தயாராக இல்லை. மத்திய அரசோடு இணக்கமாக இருந்து திட்டங்களையும், நிதியையும் பெற்று வருகிறோம் என்று தமிழக அரசும், அமைச்சர்கள் சிலரும் கூறிவருவது எவ்வளவு பெரிய மோசடி என்பதை அவர்களே இந்த பட்ஜெட்டின் மூலம் வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார்கள். ‘கஜா’ புயல் ஏற்படுத்திய சேதத்திலிருந்து மீள்வதற்கு ரூபாய் 15,000 கோடி அளவுக்கு நிவாரணம் கேட்கப்பட்டிருந்த நிலையில், அதில் 10-ல் ஒரு பகுதி கூட மத்திய அரசிடமிருந்து பெற முடியாத அவலநிலையில் தான் தமிழக அரசு உள்ளது என்பதை இந்த பட்ஜெட் அம்பலப்படுத்தியுள்ளது.

எனினும், கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதும், விவசாயிகளுக்கு சில திட்டங்களைச் செயல்படுத்துவதாக அறிவித்திருப்பதும் சிறு ஆறுதல் அளிக்கிறது. அதே நேரத்தில் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி இருப்பது மகிழ்ச்சிதான்.
ஆனால் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இதே திட்டத்திற்காக, இதே பன்னீர்செல்வம், அறிவித்த ரூ.250 கோடி என்ன ஆனது? இதுவரை அதற்கு அடிக்கல் கூட நாட்டப்படவில்லையே? அதே போல காவிரியை முற்றிலுமாக தடுத்து நிறுத்தி, தமிழகத்தைப் பாலைவனமாக்கும் மேகேதாட்டு அணை திட்டத்தை எதிர்த்து ஒரே ஒரு வார்த்தைகூட பன்னீர்செல்வத்தின் பட்ஜெட்டில் சொல்லப்படாதது வருத்தமளிக்கிறது. இன்னொரு புறம், இந்திய அளவில் அதிக வருவாய் பற்றாக்குறை உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்டிருக்கிற நிலையில், வருவாயைப் பெருக்குவதற்கான ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை. ஏற்கெனவே கடனில் தத்தளித்துக்கொண்டிருக்கும் தமிழக அரசின் கடன் இப்போது 3 லட்சத்து 97 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. கழுத்தை நெறிக்கும் இந்த கடன்களுக்கான வட்டியாக மட்டுமே ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கட்டப்படுகிறது. இப்படி கடன் அளவும் அதற்குச் செலுத்தும் வட்டியும் எகிறிக்கொண்டே போவது நிர்வாகத் திறமையின்மையின் குறியீடு.

மொத்தத்தில் மோசமான சுயநலத்துடன் தமிழகத்தை அடகு வைத்திருக்கும் இத்தகைய திறனற்றவர்களை, ஆட்சியில் இருந்து அகற்றுவதே நம் மாநிலத்தை மீட்டெடுக்கும் ஒரே வழி என்பதை பன்னீர்செல்வத்தின் வாயாலேயே சொல்லி இருக்கிறது இந்த பட்ஜெட்” என அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க