September 16, 2020
தண்டோரா குழு
வன விலங்குகளை வேட்டையாட துப்பாக்கி மற்றும் நாட்டு வெடிகுண்டு தயாரித்த நபரை பிடித்து வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருக்கின்றனர்.
கோவை மண்டல கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் கோவை மாவட்ட வன அலுவலர் ஆகியோர்களின் உத்தரவின்பேரில், கோவை வனக் கோட்டத்தில் காப்புக்காடுகளுக்கு வெளியே பட்டா நிலங்களில் அவுட் காய் என்ற பழங்கள் மற்றும் மாமிசப் பொருட்களில் வைக்கப்படும் சிறு அளவிலான நாட்டு வெடி குண்டுகளை கொண்டு வன விலங்குகளை வேட்டையாடும் நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில்இம்மாதிரியான நாட்டு குண்டு தயாரிப்பில் வெள்ளியங்காட்டை சேர்ந்த மூர்த்தி என்பவர் ஈடுபடுகிறார் என்று வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.அதனடிப்படையில், சம்பந்தப்பட்ட நபரை பிடிக்க பெரியநாயக்கன்பாளையம் மற்றும் காரமடை சரகர்கள் மற்றும் பணியாளர்கள் அடங்கிய தனி குழு தீவிரமாக கண்காணிக்கப்பில் ஈடுபட்ட வந்த நிலையில், சீலியூர் பேருந்து நிறுத்தம் அருகே மூர்த்தி (48) என்பவரை வன அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். அவரது வீட்டில் சோதனை செய்ததில் ஏர்கன் மற்றும் நாட்டு வெடி குண்டு செய்வதற்கு தேவைப்படும் வெள்ளை நிற வெடிமருந்து மற்றும் கரி மருந்து மூலப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் வன அதிகாரிகள், அவர் மீது மேல் நடவடிக்கை தொடர காவல்துறை வசம் ஒப்படைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், அவுட் காய் மற்றும் மாமிசப் பொருட்களில் வைக்கப்படும் சிறு அளவிலான நாட்டு வெடி குண்டு தயாரிப்பில் ஈடுபடும் நபர்களை பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக மாவட்ட வன அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவும் வனத்துறையினர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.