• Download mobile app
13 May 2021, ThursdayEdition - 1919
FLASH NEWS
  • 16-வது சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு தேர்வு
  • மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி
  • ரஷ்யாவின் ‘Sputnik V’ தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது !
  • நடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு
  • அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு!
  • 2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்
  • சசிகலா அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் – அமைச்சர் ஜெயக்குமார்
  • “அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா

திமுக ஊழல் குறித்து ஸ்டாலினும் பேசட்டும், விவாதிக்க ஸ்டாலின் தயாரா?’ – எடப்பாடி பழனிச்சாமி

April 1, 2021 தண்டோரா குழு

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் கோவை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வரும், அதிமுகவின் துணைத் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி கோவை கொடிசியா மைதானத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசியவர்,

திமுக தலைவர் ஸ்டாலின், 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி அடையும் என கனவு காண்பதாக கூறினார். மேலும், கோவை மாவட்டத்தில் அதிமுகவின் வலிமையை இன்றைய பிரச்சாரக்கூட்டம் நிரூபித்துள்ளதாக தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது,

‘வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்டாயம் வெற்றி பெறும். எத்தனை அவதூறுகளை பரப்பினாலும் நிச்சயம் அதிமுக தான் வெற்றி பெறும். காரணம், அதிமுக கூட்டணி தான் நாட்டு மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளது. இந்தியா வல்லரசாக வேண்டும் என உழைக்கும் பாஜகவோடும், வலிமையான பல்வேறு கட்சிகளோடும் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறவிருக்கிறோம்.

தமிழகத்தையும் இந்திய தேசத்தையும் வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்வது அதிமுக-பாஜக கூட்டணி தான். கோவை மாவட்டத்தில் கடந்த தேர்தலில் ஒரு தொகுதி மட்டும் கிடைக்காமல் போனது. இம்முறை 10 தொகுதிகளையும் கைப்பற்றி, அதிமுக நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெறும்.

அதிமுக நாட்டுக்காக எதுவும் செய்யவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் பொய்யான பிரச்சாரத்தை பரப்பி வருகிறார். கோவை மாவட்டத்தில் மட்டுமே ஏராளமான திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது. எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு அதிக வளர்ச்சியை இம்மாவட்டம் பெற்றுள்ளது. சாலை வசதி, குடிநீர், மேம்பாலங்கள், கல்லூரிகள் என அனைத்து வசதிகளையும் அதிமுக அரசு இம்மாவட்டத்திற்கு செய்துள்ளது.

திமுகவை போல் குடும்ப அரசியல் செய்கின்ற கட்சி அதிமுக அல்ல. தமிழகத்தையும் தேசத்தையும் வளர்ச்சி நோக்கி அழைத்துச் செல்வது எங்கள் கூட்டணி தான். தொழிற்சாலைகளும் வேலைவாய்ப்பும் நிறைந்த கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்திலேயே மிக நீளமான மேம்பாலம் இங்கு தான் உள்ளது. விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த அத்திக்கடவு அவினாசி திட்டத்தை அதிமுகதான் நிறைவேற்றியுள்ளது. 2021 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்து நாங்கள் தான் அதை திறந்து வைப்போம்.

பெண்கள் பாதுகாப்பாக வாழ உகந்த நகரமாக கோவை விளங்குகிறது. கோவை மாநகரத்தில் 20,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 68 அம்மா கிளினிக்குகள் இங்கு உருவாக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டது. ஜெயலலிதா இருந்தவரை அதை தடுத்து நிறுத்தினார். நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக அதை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதிலும் அரசு மாணவர்களுக்காக 7.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டமாக இயற்றி, 435 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிக்க வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.இது எதிர்க்கட்சிகள் அல்லது மக்களின் கோரிக்கை அல்ல. நான் அரசு பள்ளியில் படித்தவன். எனவே, என் அடி மனதில் எழுந்த திட்டத்தை நிறைவேற்றினேன்.

தொடர் வறட்சியின் போது விவசாயிகளுக்கு வறட்சி நிதி வழங்கிய ஒரே அரசு அதிமுகதான். மானிய விலையில் மகளிருக்கான இருசக்கர வாகனம், பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் என மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் ஊழல் நடந்ததாக ஆளுநரிடம் புகார் கொடுத்திருந்தார். அதில் என்னுடைய பெயரும் இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரத்து செய்யப்பட்ட டெண்டர் குறித்து அந்த புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். யாரோ ஒருவர் எழுதிக் கொடுப்பதை வாசிக்கும் ஸ்டாலின் அமைச்சர் மீதும், முதலமைச்சர் மீதும் புகார் செய்ய வரும்போது அறிக்கையை ஆராய்ந்து கொடுத்திருக்க வேண்டாமா.

திமுக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர்கள்
பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வாய்தா வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் ஸ்டாலின் அதிமுக அமைச்சர்களை ஊழல் வாதிகள் என குற்றஞ்சாட்டி பொய்யான பரப்புரையை மேற்கொள்கிறார். இதே கோவை கொடிசியா மைதானத்தில் மேடை போட்டு பதில் அளிக்க நான் தயாராக இருக்கிறேன். திமுக ஊழல் குறித்து ஸ்டாலினும் பேசட்டும், விவாதிக்க ஸ்டாலின் தயாரா?’ என தெரிவித்தார்.

மேலும், சிறுபான்மையினருக்கு என்றென்றும் அரணாக இருக்கும் அதிமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என வலியுறுத்தியவர், அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்களை பிரச்சாரக் கூட்டத்தில் பட்டியலிட்டார்.

மேலும் படிக்க