October 18, 2019
தண்டோரா குழு
மழை காரணமாக கோவை குமிட்டிபதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தரைப்பாலம் அடித்துசெல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழை துவங்கி உள்ளதை அடுத்து கோவையில் கடந்த மூன்று நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஆற்று பாதைகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது, இதில் கோவை எட்டிமடை அடுத்துள்ள குமிட்டிபதி ஆற்றில் நீர் வரத்து அதகரித்துள்ளது. இதனால் குமிட்டிபதி அருகே ஆற்றை கடக்க அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் குமிட்டி பதி மற்றும் அதனை அடுத்துள்ள கிராம மக்கள் சாவடி பகுதிக்கு செல்வதற்கான பாதை தடை பட்டு சுமார் 4 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மழை காலங்களில் குமிட்டிபதி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பாதால் , இந்த பகுதிகளில் செக் டேம் கட்டி இந்த நீரை சேமிக்க வேண்டும் என்றும், ஆற்று வெள்ளதால் சேதமான தரைப்பாலத்தை சரி செய்து தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.