May 30, 2018
மஞ்சு தாமோதரன்
மனிதராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் நாகரிகம் மற்றும் பழக்கவழக்கம் என்பது பிறப்பில் இருந்தே இருக்கும்.ஆனால் ஒரு சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் மதியிழந்து நாகரிகமற்றவர்களாக பழக்கவழக்கங்களை பின்பற்றாமலும் அங்கும் இங்கும் சுற்றி திரிந்துகொண்டிருப்பவர்களை மன நோயாளிகள் என்று இந்த சமூகம் ஒதுக்கிவைத்துள்ளது.
முகம் முழுவதும் முடி,அழுக்கு உடை,கையில் ஏதோனும் ஒரு பிளாஸ்டிக் பாட்டில் காண்போரை வியப்பாக பார்க்கும் ஒரு மனிதர்.யார் இவர் நாம் தினமும் சாலையில் செல்லும் போது இப்படி ஒருத்தரை நிச்சயம் பார்த்திருப்போம்.இவர்கள் யார் எல்லாம் யார் ஏன் சாலையில் சுற்றுத்திரிகிறார்கள்.
நம்மை போல் இவர்களுக்கு வீடுகள் குடும்பம் இல்லையா என ஒரு நாளாவது யோசித்திருப்போமா? பார்ப்பதற்கு மிகவும் பரிதாமாக இருந்தால் ஒரு நிமிடம் நின்று அவர்களை பார்த்து நாம் ஏதாவது உதவி செய்யலாமா என்று உள்ளம் ஏங்கும்.ஆனால்,அதற்குள் மூளை யோசிக்க ஆரம்பித்து விடும் இவர்களுக்கு நான் என்ன உதவி செய்ய முடியும்.இவர்களை எங்கு கொண்டு போய் சேர்ப்பது என்ற கேள்வி எல்லாம் எழும் மனதா? மூளையா என்று குழம்பிவிடுவோம்.இறுதியில் நமக்கு ஏன் இந்த வேலை வேலை கிளம்பி விடுவோம்.இது தான் நாள் தோறும் நடக்கிறது.
அப்படி என்றால் இவர்கள் மனிதர்கள் இல்லையா யார் இவர்களை கவனித்து கொள்வது. வெயில், மழை என ரோட்டோரத்தில் படுத்து சாப்பாடு கிடைக்குமா?கிடைக்காதா என்றும் தெரியாமல் நாட்களை கழித்து வரும் இவர்களை யார் பார்த்துக்கொள்வது.
இது ஒருபுறம் இருக்க அவர்களுக்கு என்று தனி காப்பகமோ மருத்துவ நிலையமோ ஏதுமின்றி வைத்திருப்பது தான் வேதனை.இவர்களை அரசும் கண்டுகொள்ளவில்லை.இந்த சமூகமும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று அவர்களை தனியாக ஒதுக்கி தான் வைக்கிறது.
இது தொடர்பாக பாரதியார் பல்கலைகழக உளவியல் துறையின் முன்னாள் துறைத்தலைவரும் தற்போது உளவியல் ஆலோசகராக பணியாற்றிவரும் வேதகிரி கணேசன் கூறுகையில்,
“தமிழகத்தில் சென்னையில் மட்டும் தான் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான காப்பகம் இருக்கிறது.அங்கேயும் நோயாளிகள் அனுமதிக்கப்படுவதில்லை.கோவையை பொறுத்தவரை மனநோயாளிகளுக்கென சரியான காப்பக வசதி இல்லை.கோவை அரசு பொதுமருத்துவமனை மனநல பிரிவிலும் போதிய பணியாளர்களும் மருத்துவர்களும் இல்லாத நிலையே காணப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் மனநோயாளிகளுக்கான காப்பகம் அமைக்க நிதி ஒதுக்க தயாராக உள்ளது.ஆனால்,நமது அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்கள்.” என்று கூறினார்.
இதுகுறித்து ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் நிர்வாகி மகேந்திரன் கூறுகையில்,
“பெங்களூருவில் ஒரு தனியார் மருத்துவமனையில் மனநல நோயாளிகளை பாதுகாத்து மருத்துவ வசதியும் அளிக்கின்றனர்.அதுபோல கோவையில் அமைத்தால் மனநோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.பொதுவாக மனநோயாளிகளை நாம் தொந்தரவு செய்தால் மட்டுமே நம்மை அடிக்க முற்படுவார்கள்.மற்றபடி அவர்கள் யாருக்கும் தொந்தரவு செய்யாமல் அமைதியாகவே இருப்பார்கள்.மனநோயாளிகளுக்கு வாக்களிக்கும் உரிமை இருந்திருந்தால் அவர்களை அரசு கண்டுகொண்டிருக்கும்.ஆதார் கார்டு இல்லை என்பதற்காக மனநோயாளிகளை கண்டுகொள்ளாமல் இருப்பது சிறந்த அரசுக்கான அடையாளம் அல்ல.ஒவ்வொரு நகரங்களிலும் மனநோயாளிகளுக்கென சிறப்பு மருத்துவமனை அமைக்கவேண்டியது அரசின் கடமை என்றார்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன் கூறுகையில்,
கோவை அரசு மருத்துவமனையில் மனநலம் பதிக்கப்பட்டவர்களுக்கென்று தனியாக பிரிவு உள்ளது.அங்கு அவர்களை பாதுகாக்க தனியாக மருத்துவர்களும் செவிலியர்களும் உள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்டவர்களை இங்கே அனுமதிக்கலாம்.ஆனால்,அவர்ககளை கவனித்து கொள்ள யாரேனும் உடன் இருக்க வேண்டும்.மேலும்,மருத்துவ கல்லுரி மாணவர்களுக்கும் செவிலியர் பயிற்சி பெறுபவர்களுக்கும் இங்கு தான் பயிற்சி அளிக்கப்படுகிறது.கோவையை சுற்றி உள்ள நான்கு மாவட்டங்களில் பாதிக்கப்படும் மனநோயாளிகளுக்கும் இங்கு தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார்.