• Download mobile app
02 Oct 2023, MondayEdition - 2791
FLASH NEWS
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வராது – ப.சிதம்பரம்
  • முதல்வர் பதவியை பாஜக கேட்கவில்லை – கே.பி.முனுசாமி

கையை வைத்தே கொலையானவரை அடையாளம் கண்டு குற்றவாளிகளை கைது செய்த கோவை போலீசார் !

September 21, 2022 தண்டோரா குழு

துடியலூர் காவல் நிலைய பகுதியில் கடந்த 15 ஆம் தேதி வி கே எல் நகர், பவர் லயன் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் இரண்டு துண்டுகள் ஆக்கப்பட்ட ஆணின் ஒரே இடது கை கிடந்ததை அறிந்த குப்பை வண்டியின் ஓட்டுனர் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் துடியலூர் போலீசார் சந்தேக மரண வழக்கு பதிவு செய்து சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் மேற்பார்வையில் கோவை சரக காவல்துறை துணை தலைவர் முத்துசாமி வழிகாட்டுதலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் முன்னிலையில் பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தலைமையில் எட்டு தனிப்படை அமைக்கப்பட்டது. அதில் 43 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பணி புரிந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள 250 கேமராக்களை ஆய்வு செய்து 150 தொழிற் கூடங்களிலும்,15 மருத்துவமனைகளிலும் சோதனைகள் மேற்கொண்டனர்.

மாவட்ட, மாநில அளவில் காணாமல் போன 500க்கும் மேற்பட்ட நபர்களை பற்றி விசாரணை செய்ததில் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் பிரபு என்பவர் கடந்த 14″ஆம் தேதி முதல் காணவில்லை எனவும் இது தொடர்பாக 18″ஆம் தேதி கோவை மாநகர காவல் துறையில் உள்ள காட்டூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதை அறிந்த தனிப்படை காவல்துறையினர் இவ்வழக்கின் விசாரணையை துரிதப்படுத்தினர்.

இந்த சம்பவத்தில் மேல் விசாரணையை தீவிரப்படுத்தினர்.மேற்படி பிரபுவின் வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட 7″ கைரேகைகளில் இரண்டு கைரேகைகள் துடியலூரில் கிடைத்த கையின் கைரேகையுடன் ஒத்துப்போனது.தொடர்ந்து பிரபு தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் பிரபு என்பவர் காந்திபுரம் பகுதியில் அழகு நிலையத்தில் வேலை செய்து வருவதாகவும் அவர் குடியிருந்து வந்த பகுதியில் வசிக்கும் 39 வயதுடைய சரவணம்பட்டி பகுதியில் அழகு நிலையத்தில் பணி செய்து வரும்
திருமணமான பெண்ணுடன் பழக்கம் இருந்ததாகவும் அதனால் ஏற்பட்ட முன்விரோதத்தின் காரணமாக பெண்ணின் நண்பர்கள் ஆன அமுல் திவாகர் 34 , கார்த்திக் 28, ஆகியோர் பிரபுவை காந்திமா நகரில் உள்ள வீட்டில் வைத்து கொலை செய்து பிரபுவின் உடலை 12 பாகங்களாக வெட்டி தனித்தனியாக பல்வேறு இடங்களில் வீசி சென்றுள்ளனர்.

தனிப்படை காவல்துறையினர் இறந்த பிரபுவின் வெட்டப்பட்ட 8″ துண்டு உடல் பாகங்களை கைப்பற்றியும் இவ்வலக்கில் தொடர்புடைய மூன்று எதிரிகளை கைது செய்தும் இவ்வழக்கினை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது..

8 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கண்டுபிடித்துள்ளோம்.சினிமா பாணியை விட தலையை கண்டுபிடிக்கும் முன்பே கையை வைத்தே கொலையானவரை அடையாளம் கண்டோம்.காணாமல் போனவர்களின் தகவல்களை எடுத்து கைரேகைகளை சேகரித்து இறந்தவர் விவரங்களை தேடினோம்.காட்டூர் காவல் நிலையத்தில் மிஸ்ஸிங் புகாரில் வந்த பிரபுவின் விவரம் மற்றும் அவரின் கைரேகையை அவரது வீட்டில் இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்ததை சேகரித்து மர்மமாக கிடைத்த கையை வைத்து இறந்தவர் பிரபு என்பதை உறுதிப்படுத்தினோம்.பிரபு வீட்டிற்கு இரண்டு பேர் வந்து அழைத்துச் சென்றனர். அதன் சிசிடிவி இருந்தது.

அதை வைத்து விசாரணையை தீவிர படுத்தினோம்.அதேபோல பிரபுவின் செல்போன் உரையாடலை வைத்து குற்றவாளிகளை தேடினோம்.கவிதா, திவாகர் ஆகியோர் செல்போன் ஒரே நேரத்தில் காந்திமாநகரில் ஸ்விட்ச் ஆப் ஆனது.அதை தொடர்ந்து அவர் மீது எழுந்த சந்தேகத்தில் கைது செய்தோம். இறந்தவரின் 8 உறுப்புகளை கண்டெடுத்துள்ளோம்.

காவல்துறை சோதனை பகுதியை பார்த்து குற்றவாளிகள் கையை குப்பைத்தொட்டியில் வீசி சென்றுள்ளனர். ஆகவே சோதனை என்பது காவல்துறைக்கு முக்கியமானதாக உள்ளது.
கடந்தாண்டை விட இந்த ஆண்டு 16 கொலைகள் குறைவாகி உள்ளது.தீய பழக்கமே குற்றத்திற்கு காரணமாக உள்ளது. தனிப்படைக்கு ஐஜி பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார். தனிப்படை குழுவினர் கைரேகைக்கு மிகவும் சிரமப்பட்டனர். கவிதாக்கு பிரபுவுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.காந்திமாநகரில் உள்ள வீட்டில் வைத்து கொலை நடைபெற்றுள்ளது. கவிதாவின் புகைப்படத்தை வைத்து பிரபு மிரட்டியதால் விளைவு என விசாரணையில் தெரியவந்துள்ளது.1 வாரமாக திட்டம் தீட்டி கொலை நடைபெற்றது. தலை திருப்பூர் அருகே உள்ள கிணற்றில் இருந்தது. இந்த சம்பவத்தில் மூன்று பேருமே கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், உள்ளிட்ட பல அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதையடுத்து மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் சிறப்பாக பணியாற்றி குற்றவாளிகளை கைது செய்த துணை கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தலைமையிலான குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். முதற்கட்டமாக 30 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க