• Download mobile app
15 Sep 2019, SundayEdition - 1313
FLASH NEWS
  • காஷ்மீரில் கட்டுப்பாடுகளை கைவிட ஐ.நா. மனித உரிமை ஆணையம் வலியுறுத்தல்!
  • தங்கம் விலை தொடர்ந்து சரிவு – ஒரு கிராம் தங்கம் ரூ.3,645க்கு விற்பனை
  • 3 நாடுகள் பயணத்தில் ரூ.8830 கோடி முதலீடு : முதலமைச்சருக்கு ராமதாஸ்,வாசன் பாராட்டு
  • ராஜபாளையம் : விசைத்தறி கூடத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு
  • விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிக்கிறோம் – இஸ்ரோ

ஒரே குறும்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கோவை இளைஞன் !

June 10, 2019 பி.எம். முஹம்மது ஆஷிக்

சமீப காலங்களில் திருநங்கைகளின் வாழ்வியலையும் அவர்களின் உணர்வு ரீதியிலான போராட்டங்களைப்பற்றியும் வெளிவரும் படைப்புகள் அதிகரித்து வருகின்றன.இதில் சில படங்களே சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.அந்த வரிசையில் கோவையை சேர்ந்த இளைஞன் பிரவீன்குமார் இயக்கிய ‘திருத்தாய் அவளே’ குறும்படமும் தற்போது சமூக வலைத்தளத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இக்குறும்படம் குறித்து பிரவீனிடம் பேசினோம்,

என் சொந்த ஊர் கோயமுத்தூர் தான். பி.எஸ்.ஜி தொழிநுட்பக்கல்லூரியில் படித்தேன். படிக்கும்போதே புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகமாக இருந்தது. சில படங்களுக்கும் புகைப்படங்கள் எடுத்துக் கொடுத்துள்ளேன். அப்படி தான் எனக்கும் சினிமா மீது ஆர்வம் வந்தது. இதுவரை மூன்று குறும்படங்கள் எடுத்துள்ளேன். என் இரண்டாவது குறும்படமாக `எனக்கெனப் பிறந்தவளே’ என்ற படத்தை பார்த்து ஜீவா அக்கா எனக்கு போன் பண்ணி பேசுனாங்க.`பிரதர் உங்க ஷார்ட் ஃபிலிம் பார்த்தேன். ரொம்ப டச்சிங்கா இருந்தது. உங்ககிட்ட வேற ஏதாவது கதை இருந்தா சொல்லுங்க. நாம சேர்ந்து ஒரு புராஜெக்ட் பண்ணலாம்’னு சொன்னாங்க. நிறைய படங்களில் நடித்துள்ள அவர்களே எனக்கு போன் பண்ணி பேசுறாங்களேன்னு நினைச்சு சந்தோஷமா இருந்துச்சு. உடனே அவங்களுக்காகவே ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணினேன். படம் முழுவதும் திருநங்கைகள் பற்றி தான் இருக்க வேண்டும் என முடிவு பண்ணினேன்.

இந்த கதை வித்தியாசமா இருக்கிறதே?

ஆம்! நிறைய திருநங்கைகளைப் பற்றிய படங்களையும் பார்த்தேன். அதில் அவர்களை கெஸ்ட் ரோலாவும், க்ளாமராவும் இல்லாட்டி, கஷ்டப்படுறவங்களாகவும் தான் காட்டியிருந்தாங்க. முதலில் திருங்கைகள் மீதான் அந்த பார்வையை உடைக்க வேண்டும் என்று நினைத்தேன். புதுசா ஒரு கான்செப்ட்டை செலக்ட் பண்ணலாம்னு தோணுச்சு.அப்போதான் எனக்கு திருநங்கைகளாலும் குழந்தை பெத்துக்க முடியும்ங்கிற ஒரு தகவல் கிடைத்தது. இது நல்ல இருக்கே என்று மக்களிடம் இதை கொண்டு சேர்க்கணும் முடிவு பண்ணினேன். அதுக்கான எல்லா ரிப்போர்ட்ஸையும் கலெக்ட் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.

உண்மையில் இது சாத்தியமா?

பல மருத்துவர்களிடம் இந்த கதை குறித்து பேசியிருக்கிறேன். அப்போது அவர்கள், `இயல்பாவே பெண்களுக்குக் கர்பப்பை மாற்றுவது சவாலான விஷயம். அதுலயும் திருநங்கைனா அவங்களோட உடல்ல புதுசா ஒரு உறுப்பை வைக்கப் போறோம். அதை அவங்க உடம்பு தாங்கிக்கணும். அதுக்கப்பறம் ஒரு வருஷம் கழிச்சு அந்த உறுப்பு உடல்ல செட் ஆனதுக்குப் பிறகுதான் அவங்களால கருவைச் சுமக்க முடியும்’னு சொன்னங்க. அப்போது தான் எனக்கு இன்னும் கதை மீது நம்பிக்கை வந்தது.

திரைக்கதையில் எப்படி சாத்தியமானது?

அவ்வளவு எளிதாக அமையவில்லை ஆரம்பத்தில் எனக்கு கொஞ்சம் சவாலாகவே தான் இருந்தது. ஆனா, ஜீவா அக்கா கதைக்கு ஏற்ப அழகான நடிப்பை வெளிப்படுத்திவிட்டாங்க. இது எனக்கு எளிதாக இருந்தது. அவங்க மட்டுமல்லாம, கவன் ப்ரியதர்ஷினி மேடமும் சிறப்பா நடிச்சிக் கொடுத்தாங்க.

எந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்துள்ளது?

மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை இந்த குறும்படத்தை யூடியுபில் 16 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதுமட்டுமின்றி 6 இன்டர்நேஷனல் விருதும் 23 தேசிய அளவில் விருதும் கிடைத்துள்ளது. யார் என்று தெரியாத பல நண்பர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் எனக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதுவே என்னை சாதிக்க தூண்டுகிறது.

அடுத்து படைப்பு?

தற்போது மீண்டும் பெண்கள் விழிப்புணர்வு குறித்து ஒரு குறும்படத்தை இயக்கவுள்ளேன். அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளேன். எனினும் சரியான ஒரு அங்கீகாரம் கிடைத்தால் மேன்மேலும் என்னால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
தனக்கான ஒரு பாணியை உருவாக்கி சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என முயலும் இவரை போன்ற இளைஞர்களை வரவேற்போம்.விரைவில் வெள்ளித்திரையிலும் இவர் கால்பதிக்க வாழ்த்துவோம்.

மேலும் படிக்க