March 1, 2017
தண்டோரா குழு
‘கோவையின் காவல் தெய்வம்’ என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் தேரோட்டம் புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
கோனியம்மன் கோவில் டவுன் ஹால் பகுதி பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதைப் போல், இந்த ஆண்டு திருவிழா பிப்ரவரி 14ம் தேதி பூச்சாற்று நிகழ்ச்சியோடு தொடங்கியது. பிப்ரவரி 21ம் தேதி கொடியேற்று விழாவும், பிப்ரவரி 26ம் தேதி திருவிளக்கு வழிபாடும் நடத்தப்பட்டன. செவ்வாயன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேர் பவனி புதனன்று நடைபெற்றது.
இந்தத் தேரோட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி. நாகராஜன், சட்டப் பேரவை உறுப்பினர் அம்மன் அர்சுனன் ஆகியோரும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அவர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைத்தனர்.
கோவை ராஜ வீதியில் உள்ள தேர்நிலை திடலில் தொடங்கிய தேரோட்டம் ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பண்ண கவுண்டர் வீதி வழியாக மீண்டும் தேர்நிலைத் திடலை அடைந்தது.
கோனியம்மனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். வழக்கம் போல் இந்த ஆண்டும் தேரோட்ட நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது என்று பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.