• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரு குடும்பத்தை வீதிக்கு இழுப்பது கேவலம் – தம்பியின் குற்றச்சாட்டுக்கு நாசர் விளக்கம்

April 5, 2019 தண்டோரா குழு

நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக மத்திய சென்னையில் போட்டியிடுகின்றார். இந்த நிலையில் நாசர் மற்றும் அவரது மனைவி குறித்து சமீபத்தில் நாசரின் சகோதரர் ஜவஹர் என்பவர் பல திடுக்கிடும் குற்றச்சாட்டுக்களை தெரிவித்திருந்தார். நாசர் தனது பெற்றோர்களை கவனித்து கொண்டதில்லை என்பது அவற்றில் ஓன்று.

மேலும், சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த நாசரின் தம்பி ஜவஹர், “நாசர் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார். இதற்கு காரணம் அவரது மனைவி கமீலாதான். நாசருக்கு திருமணம் ஆனதிலிருந்து நாங்கள் அவரைச் சந்திக்கக்கூட அவரது மனைவி அனுமதிப்பதில்லை. எங்களது குடும்பத்தை பிரித்தது கமீலாதான். நாசர் ஒரு அப்பாவி, அவருக்கு முழு விஷயமும் தெரியாது. கமீலா தான் அவருக்கு மேனேஜர் எனக் கூறியிருந்தார்.இந்நிலையில் தம்பி ஜவஹரின் குற்றச்சாட்டுக்கு தற்போது நாசர் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

என்னை அறிந்தோர் புரிந்தோர் எல்லோருக்கும் என் வணக்கங்கள்.சமீபகாலமாக என் குடும்பம்சார் பிரச்சினைகள் எல்லா ஊடகங்களிலும் வந்து கொண்டிருக்கின்றன. கமிலா நாசருக்கு “ஓட்டுப் போட்டுவிடாதீர்கள் “ என்ற ஒரு செய்தி கடத்தவே ஒரு குடும்பத்தை வீதிக்கு இழுப்பது கேவலம் என்று கருதுகிறேன். இதற்கு பின்னால் ஆதாயம் பெறும் அரசியல் வித்தகர்கள் பின் நின்று ஆட்டுவிக்கிறார்கள் என்று நான் எண்ணுவது இயற்கையானது.

நாசரின் நிழலின் கீழ் வளர்ந்தவர் அல்ல கமிலா. என்னைப் போலவே அவருக்கான தனித்துவம், தனித்திறன் இருக்கிறது. நான், அல்லது நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை விளக்க என் 40 வருட வாழ்க்கை உங்களுக்கு சொல்ல வேண்டும். அதற்கான தருணம் இதுவல்ல. ஆனால், நான் விளக்குவேன். உரிய நேரத்தில் உரியவர்க்கு செய்ய வேண்டியது செய்யப்பட்டது. குடும்பத்தில் ஒருவருடைய பலமான தூண்டுதல் பேரிலேயே என்னுடைய கடமை தடை செய்யப்பட்டது. அதைமீறியும் என் கடமைகளை நிறைவேற்றிக் கொண்டுதான் இருக்கிறேன்.பல விஷயங்கள் மறைக்கப்பட்டு, நடந்த சில விஷயங்கள் திரிக்கப்பட்டு, வலு சேர்க்க சிலவற்றை புனையப்பட்டு, இச்சகதி எங்கள் மேல் வீசப்பட்டிருக்கிறது.

வேட்பாளர் ஒருவர் மீது சுமத்துவதற்கு பழி ஒன்றும் கிடைக்காத போது வீசப்பட்ட சகதி எங்கள் பொது வாழ்க்கைக்கு கிடைத்த பரிசென்றே கருதுகிறேன். தேர்தலை முன் வைத்து வீசப்பட்ட இச்சகதி தேர்தல் வரை எங்கள் மீதே கிடந்து நாறட்டும். என்ன நடந்தது என்று சொல்ல வேண்டிய கட்டாயத்தை நான் உணரவே செய்கிறேன். தேர்தல் நிறைவுறட்டும், நானும் கமிலாவும் வேறு கிரகத்திற்கு பறந்து செல்லப்போவதில்லை. எதிர்கொள்ள தின்மையும் இருக்கிறது.தெளிவும் இருக்கிறது. இப்போதைக்கு இவ்வளவே எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க