January 25, 2022
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி கிழக்கு மற்றும் மேற்கு மண்டல பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 66க்குட்பட்ட உடையாம்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி கமிஷனர் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு முன்பு, பின்பு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், தாய் சேய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள் போன்ற விவரங்களை கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, மேற்கு மண்டலம் வார்டு எண் 23க்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் கிழக்கு வெங்கடசாமி சாலையில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளவர்களுக்கு மருத்துவர்களால் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டார்.பின்னர், கிழக்கு மண்டலம் வார்டு எண் 64க்குட்பட்ட சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் சாலையில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது நகர்நல அலுவலர் சதீஷ்குமார், மேற்கு மண்டல உதவி கமிஷனர் சரவணக்குமார், மண்டல சுகாதார அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.