December 3, 2021
நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகி பல மொழிகளில் வெளியாகியுள்ள மரக்கார் திரைப்படத்தின் சிறப்பு காட்சி கோவையில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்காக திரையிடப்பட்டது.
பிரபல நடிகர்களான மோகன்லால் ,பிரபு, அர்ஜூன் உள்ளிட்டோர் இணைந்து நடித்து பல மொழிகளில் வெளியாகியுள்ள வரலாற்று திரைப்படம் மரைக்காயர். இந்திய விடுதலைப் போரில் கப்பல் படை முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது தொடர்பான வரலாற்று தொகுப்பு இத்திரைப்படத்தில் மையக்கருவாக காண்பிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் வெளியாகியுள்ள நிலையில் கோவை ப்ரூக்ஃபீல்ட்ஸ் மால் வளாகத்தில் உள்ள திரையரங்கில் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. நடிகர் மோகன்லால் சார்பில் கோவையில் உள்ள அவரது நண்பரான அனூப் ஆண்டனி மூலம் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்காக பிரத்தியேகமாக நடத்தப்பட்ட இந்த காட்சியில் திரளானோர் பங்கேற்று மகிழ்ந்தனர்.
முன்னதாக திரையரங்கிற்குள் சென்ற முதியோர்கள் மற்றும் ஆதரவற்ற சிறுவர் சிறுமியர் கைகளை உயர்த்தி காண்பித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திரைப்படத்தின் நடுவே வீடியோ கால் மூலம் தனது நண்பரை தொடர்பு கொண்ட நடிகர் மோகன்லால் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். இதுவரை தாங்கள் உயர் தர திரையரங்கிற்கு சென்று திரைப்படம் பார்த்ததில்லை எனவும் தற்போது இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது தங்களுக்கு உள்ளார்ந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் திரைப்படத்தை பார்த்த ஆதரவற்றோர் கூறினர்.
மேலும் ஆதரவற்றவர்களுக்கு இந்த வரலாற்று திரைப்படத்தை சிறப்பு காட்சி மூலம் காண்பித்தது தங்களுக்கு மிகுந்த மனநிறைவை அளிப்பதாகவும் அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.