November 20, 2021
தண்டோரா குழு
கொரோனா தொற்று பரவல் இந்தியாவில் கட்டுக்குள் இருப்பதைத் தொடர்ந்து ரெயில்வே துறையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.ரெயில் பயணிகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளன. அனைத்து சிறப்பு ரெயில்களும் வழக்கமான பெயரில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புறநகர் மின்சார ரெயில்களில் எந்த நேரமும் அனைத்து பயணிகளும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் விலக்கப்பட்டது.
நாடு முழுவதும் ரெயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. நிறுத்தப்பட்டு இருந்த பயணிகள் ரெயில் அனைத்தும் மீண்டும் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் ரெயில்களில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சமைக்கப்பட்ட உணவு நிறுத்தபட்டிருந்தது. தொற்று பரவல் காரணமாக ரெயில் பெட்டிகளில் உணவு தயாரிப்பது நிறுத்தப்பட்டது.தற்போது அறிவிக்கப்பட்ட பல்வேறு தளர்வைத் தொடர்ந்து உணவு வழங்குவதற்கும் இருந்த தடை நீக்கப்பட்டது. இதனால் ரெயில் பயணிகளுக்கு சமைக்கப்பட்ட உணவு மீண்டும் வழங்கப்படும் என்று ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய ரெயில்வே உணவு, சுற்றுலா கழகத்துக்கு (ஐ.ஆர்.சி.டி.சி.) ரெயில்வே வாரியம் கடிதம் எழுதி உள்ளது.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக சமைக்கப்பட்ட உணவை ரெயில்களில் வழங்குவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது நிலைமை சீராகி வருவதால் ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு சமைக்கப்பட்ட உணவு விநியோக சேவையை மீண்டும் தொடங்க ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
உடனடியாக சாப்பிடக்கூடிய உணவு விநியோக சேவையையும் ஐ.ஆர்.சி.டி.சி. தொடங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.