November 19, 2021
தண்டோரா குழு
விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்களை திரும்பபெற முடியாது என்கிற மோடியின் சர்வாதிகாரத்தை நொருக்கிய விவசாயிகளுக்கு தலைவணங்குகிறோம். இது இந்திய நாட்டின் உழைப்பாளி மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தலைநகர் டெல்லியில் தங்கி லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த ஓராண்டாக போராட்டத்தை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் நரேந்திரமோடி இன்று அறிவித்தார்.விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் எழுச்சிகரமான இயக்கங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக கோவை காந்திபுரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் விவசாயிகளுக்கு வாழ்த்து தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுபபினர் சி.பத்மாநாபன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
முன்னதாக பி.ஆர்.நடராஜன் எம்பி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்பப் பெறும்வரை போராட்டம் நடத்திய அனைத்து விவசாயிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துககொள்கிறேன். 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த போராட்டத்தில் இன்னுயிரை கொடுத்துள்ளார்கள். இந்த வீரமரணத்திற்கு பிறகும் விவசாயிகள் பல்வேறு வடிவங்களில் இந்த போராட்டத்தை தொடர்ந்தனர்.
வாகனத்தை ஏற்றி விவசாயிகளை கொலை செய்தபோதுகூட நெஞ்சுறுதியோடு விவாசாயிகள் எந்த அடக்குமுறைக்கும் ஆளாகாமல் போராட்டத்தை முன்னெடுத்த விவசாயிகள் அனைவருக்கும் நாங்கள் தலை வணங்குகிறோம். யாராலும் அசைக்கமுடியாது என்கிற ஆணவத்தில் ஆட்சியை நடத்திய மோடி தலைமையிலான ஒன்றிய அரசை எதிர்த்து நாடாளுமன்றத்தில், மக்கள் மன்றத்தில் குரல் எழுப்பியவர்கள், பல்வேறு மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய சட்டமன்றங்களுக்கும், அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் எங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
மோடியின் சர்வாதிகாரத்தை அடித்து நொருக்கிய இந்திய நாட்டின் உழைப்பாளி மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என சொல்வதில் பெருமையடைகிறோம். விவசாயிகளின் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அதிகப்படியான இழப்பீட்டை மோடி அரசு வழங்க வேண்டும். இதேபோன்று பொதுத்துறைகளை தனியாருக்கு தாரைவார்க்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை எதிர்த்து, போராட்டம் நடைபெற்று வருகிறது. அனைவரும் ஒன்றினைந்து தொழிலாளி வர்க்கம் மேற்கொள்ளும் அத்தகைய போராட்டமும் மோடி அரசை பணியவைக்கும் என்றார்.