October 26, 2021
தண்டோரா குழு
தன்பாத்தில் இருந்து கோவை வந்த
ரயிலில் கடத்தி வரப்பட்ட 23.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கோவை வழியாக ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 9 மணிக்கு கோவை ரயில் நிலையத்துக்கு வந்தது. போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரயிலில் ஒவ்வொரு பெட்டியாக ஏறி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது எஸ்4 பெட்டியில் சீட்டுக்கு அடியில் மறைத்து மூட்டையில் கடத்தி வரப்பட்ட 16.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் ரயில்வே எஸ்பி இளங்கோவுக்கு அதே ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரயில்வே டிஎஸ்பி யாஸ்மின் தலைமையிலான போலீசார் அந்த பெட்டியில் சோதனை செய்தனர்.
அப்போது இருக்கைக்கு அடியில் மூட்டையில் மறைத்து கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் ரயிலில் கடத்தி வரப்பட்ட 23.5 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் சோதனை செய்ய வருவதை அறிந்த மர்ம நபர்கள் கஞ்சாவை ரயில் பெட்டியில் போட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் ரயில்வே வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் சந்தேக நபர்களின் நடமாட்டம் உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.