October 11, 2021
தண்டோரா குழு
கோவையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், பேனர்களை, 17ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் படியும், தலைமைச் செயலாளரின் அறிவுறுத்தலின்படியும், கோவை மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சி சாலைகள், உள்ளாட்சி அமைப்புக்கு சொந்தமான சாலைகள், நடைபாதைகள் ஆகிய இடங்களில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், பேனர்கள், பிளக்ஸ் பலகைகள்,கொடிக் கம்பங்கள் ஆகியவற்றை அகற்றுமாறு தெரிவிக்கப்படுகிறது.
இதில், தனி நபர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர்களால் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், பேனர்கள் உள்ளிட்டவற்றை வரும் 17ம் தேதிக்குள் அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் வருவாய்த்துறையினர் மூலம் அகற்றப்படும். அதற்கான செலவுத் தொகை சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்பினரிடம் இருந்து வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.