September 1, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டம் ராமநாதபுரத்திலுள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் சமீரன் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் 9,10,11,12-ம் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.அதே போல் கல்லூரிகளும் துவங்கப்பட்டுள்ளன.இதனிடையே பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அரசு வழிகாட்டி விதிமுறைகளை பின்பற்றி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகளில் பெஞ்சுகளை அமைத்து, 6அடி இடைவெளியில் அவர்களை உட்கார வைக்கவும், அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பிற பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராமநாதபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளயில் மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் வகுப்பறைகளில் மாணவியர்கள், சமூக இடைவெளியுடன் அமரவைக்கப்பட்டிருப்பதையும் நேரில் பார்வையிட்டு உறுதி செய்தார்.
உணவு இடைவேளை மற்றும் பாடவேளையின் போது மாணவியர்கள் உரிய இடைவெளியுடன் சென்று வருவதை கண்காணிக்கவும், தினசரி மாணக்கர்களின் வருகைப் பதிவேட்டில் வருகை பதிவினை முறையாக பராமரித்து வாராந்திர ரீதியாக மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கவும் ஆசிரியர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். மதிய உணவு வேளையின் போது கூடுதல் வகுப்பறைகளை ஒதுக்கீடு செய்து, ஒரே இடங்களில் அதிக நபர்கள் கூடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இவ்ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, வருவாய் கோட்டாட்சியர் செந்திலரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.