September 1, 2021
தண்டோரா குழு
தமிழகத்தில் இன்று 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறவுள்ளது. வாரத்தில் ஆறு நாட்களும் வகுப்புகளை நடத்தவும், ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணவர்கள் மட்டும் தனிமனித இடைவெளியை பின்பற்றி அமர வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும், மாணவர்களுக்கு நாள்தோறும் உடல்வெப்ப நிலையை பரிசோதிக்க வேண்டும், பள்ளிகளில் போதிய இடவசதி இல்லாதபட்சத்தில் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையிலும், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் வகுப்புகள் நடத்தலாம் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து கோவையில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளி வளாகத்தில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு பள்ளிகள் தூய்மை படுத்தப்பட்டு வந்தன. இன்று பள்ளி,கல்லூரி வளாகங்களில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால்,காலை முதல் மாணவர்கள் பள்ளிக்கு வந்த வண்ணமாக இருக்கின்றனர்.
தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்திற்குள் வரும் மாணவர்களிடையே சமூக இடைவெளி மற்றும் முகம் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.அதேபோல வெப்ப பரிசோதனை மற்றும் பள்ளி வளாகத்தின் முன்பு சானிடைசர் வைக்கப்பட்டு கைகளை சுத்தப்படுத்திய பின்னரே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.