August 28, 2021
தண்டோரா குழு
வேளாண் வளர்ச்சி, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், மாவட்டத்தில் 2021- 2022 நிதியாண்டுக்கு, ரூ.22,712.75 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட வங்கியாளர்களுடனான ஆலோசனை கூட்டம், கலெக்டர் சமீரன் தலைமையில்,ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர்( மகளிர் திட்டம்) ரமேஷ்குமார், நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் திருமலராவ், கனரா வங்கி துணை பொதுமேலாளர் ஸ்ரீனிவாசராவ், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் கார்த்திகைவாசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கணேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
ஊரக மற்றும் வேளாண் வளர்ச்சி, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து, அதன் மூலம் கடனாற்றல் மதிப்பீடு செய்து, வங்கிகளில் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. 2021- 2022 நிதியாண்டுக்கு தமிழ்நாட்டிலேயே மிகவும் அதிகபட்சமாக ரூ.22,712.75 கோடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில், விவசாய கடனுதவிக்கு ரூ.7991.68 கோடி, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மையத்திற்கு ரூ.9960.07 கோடி, மற்ற முன்னுரிமைக் கடன்களுக்கு ரூ.4,761 கோடி என மொத்தம் ரூ.22,712.75 கடன் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டை விடவும் 2,238.22 கோடி அதிகமாகும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, 2021 – 2022 ஆம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ் தேங்காய் நார் மதிப்பு கூட்டப்பட்டபொருள் தயாரிக்கும் நிறுவனம் அமைக்க மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் ரூ.25 லட்சம் கடனுதவியும், வர்த்தகத் தொழில் துவங்க ஒரு பயனாளிக்கு ரூ.4.70 லட்சம் கடனுதவி, மகளிர் திட்டத்தின் கீழ் சின்னக்கள்ளிப்பட்டி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.25 லட்சம், ஆனைமலை ஒன்றியம், நாகூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு ரூ.23 லட்சம் கடனுதவிகள் வழங்கினார்.