August 28, 2021
தண்டோரா குழு
காவல் துறையின் அணுகுமுறை குறித்து பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிப்பதற்காக ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் கருத்து பெட்டிகளை வைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
காவல் துறையின் அணுகுமுறை குறித்து பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிப்பதற்காகவும், காவல் நிலையத்தில் தங்களின் அனுபவங்களை பகிா்ந்து கொள்ளும் விதமாகவும், கோவை மாவட்டம் அனைத்து உட்கோட்ட அலுவலகம், காவல் நிலையங்கள் மற்றும் காவல் அலுவலகத்தில் இயங்கக்கூடிய அனைத்து அலுவலகங்களின் நுழைவாயிலில் கருத்து கேட்பு படிவம் வைக்கப்பட வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் உத்தரவிட்டுள்ளாா்.
மேலும்,ஒவ்வொரு மாதம் இறுதியில் படிவங்களை எடுத்தும் பிரதி மாதம் 1ஆம் தேதி மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளரின் தனி அறிக்கையுடன் அனுப்பப்பட வேண்டும். கருத்துகள் குறித்தான படிவம் நிலைய வரவேற்பாளா்/நிலைய எழுத்தா் வசம் இருக்க வேண்டும்.இந்தப் படிவத்தை காவல் நிலையம் மற்றும் உட்கோட்ட அலுவலகம் அணுகி வரும் பொதுமக்களிடம் தங்களின் கருத்துகளை தெரிவிப்பதற்காக வழங்கப்பட வேண்டும்.
இதில் பொது மக்களின் நன்மதிப்பை பெற்று சிறப்பாக பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்குப் பாராட்டுச் சான்று வழங்கப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளார்.