August 17, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் நரிக்குறவர் நலவாரியங்களில் இதுவரை பதிவு செய்யாத நரிக்குறவர் இன மக்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் மூலம் பதிவு செய்து நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையலாம் என ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் நரிக்குறவர் நல வாரியங்களில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு, தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் நரிக்குறவர் இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வருகின்றது. விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் விபத்தினால் மரணம் ஏற்பட்டால் ரூ.1 லட்சம் உதவித்தொகை, விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மேலும் இயற்கை மரணத்திற்கு ரூ.20 ஆயிரம், ஈமச்சடங்கு செலவிற்காக ரூ.5 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 10 மற்றும் 11-ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைகளுக்கு ரூ.1000, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.1000 மற்றும் 12-ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைகளுக்கு ரூ.1500 என பல்வேறு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது.
அதே போல் 1 முதல் 5ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு மாதம் ரூ.50 வீதம் பத்து மாதங்களுக்கு ரூ.500, 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு மாதம் ரூ.100 வீதம் 10 மாதங்களுக்கு ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதுதவிர திருமண உதவித்தொகை, மூக்கு கண்ணாடி செலவு தொகை, முதியோர் ஓய்வூதியம், தனிநபர் தொழில் தொடங்க முழுமானியம் போன்றவைகளும் வழங்கப்படுகிறது.
நரிகுறவர் நலவாரியங்களில் இதுவரை பதிவு செய்யாத நரிகுறவர் இன மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் (தொலைபேசி எண்:0422-2300404) உடனே பதிவு செய்து நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.