August 16, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை மற்றும் மாவட்டக்கலை மன்றம் சார்பில் கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு விருதுகளை ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வழங்கி பொன்னடை அணிவித்து கௌரவித்தார்.
இது குறித்து ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கூறியதாவது:
தமிழ்நாட்டின் பாரம்பரிய இசை, நாட்டியம், நாடகம், கிராமியம், நுண்கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் 18 வயதுக்குட்பட்டோருக்கான கலை இளமணி விருது, 19 வயது முதல் 35 வயது பிரிவினருக்கான கலை வளர்மணி விருது, 36 வயது முதல் 50 வயது பிரிவினருக்கு கலைச்சுடர்மணி விருது, 51 வயது முதல் 60 வயது பிரிவினருக்கு கலை நன்மணி விருது, 61 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கலை முதுமணி விருது ஆகிய 5 விருதுகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, கோவை மாவட்டத்தில் கிராமிய கலையில் சிறப்புகள் பெற்றமைக்காக நேகாஷ், நிதிஷ் சகோதர்கள், கலை இளமணி விருதுக்கு ஓவியர் விக்னேஷ்ராஜ், கலை வளர்மணி விருதுக்கு பரதநாட்டிய ஆசிரியை விஜயலட்சுமி, கலைச்சுடர்மணி விருதுக்கு கிராமிய தவில் கலைஞர் ஈஸ்வரன், கலை நன்மணி விருதுக்கு வால்பாறையை சேர்ந்த நாடக் கலைஞர் சாமி (எ) ஆர்.கந்தசாமி கலை முதுமணி விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், கலை இளமணி விருதுக்கு ரூ.4 ஆயிரம், கலை வளர்மணி விருதுக்கு ரூ.6 ஆயிரம், கலைச்சுடர்மணி விருதுக்கு ரூ.10 ஆயிரம், கலைநன்மணி விருதுக்கு ரூ.15 ஆயிரம், கலை முதுமணி விருதுக்கு ரூ.20 ஆயிரம் பரிசுதொகைக்கான காசோலைகளும் விருது பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலை பண்பாட்டுத்துறையின் மண்டல உதவி இயக்குநர் ஹேமநாதன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்அண்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.