August 16, 2021
தண்டோரா குழு
கோவை கிரெடாய் அமைப்பு அரசுக்கு விடுத்த வேண்டுகோளை ஏற்று உள்ளுர் திட்டக்குழுமதிற்கு அனுமதி வழங்குவதற்கான உச்சவரம்பை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
கோவையில் உள்ள உள்ளுர் திட்டக்குழுமத்தின் அங்கீகார அதிகார வரம்பை உயர்த்த வேண்டும் என, கோவை கிரெடாய் அமைப்பு அரசுக்கு வேண்டுகோள் விடுத்து கடந்த 2021 ஆகஸ்ட் 3 ம் தேதி அளித்த மனுவின் அடிப்படையில், சென்னை, ஊரக மற்றும் நகர திட்ட இயக்குனரகம் கடந்த ஆகஸ்ட் 14, 2021 அன்று ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கையின்படி,
கோவை உள்ளுர் திட்டக்குழுமம், மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள உள்ளுர் திட்டக்குழுமங்கள், கட்டடங்கள், லே-அவுட் அனுமதி மற்றும் நில உட்பிரிவுகளுக்கு அனுமதி அளிக்க அதிகாரம் அளிக்கப்படுகிறது.
புதிய வழிகாட்டுதல்களின்படி, குடியிருப்பு, வணிக மற்றும் நிறுவனங்களின் கட்டடங்கள், அதன் பரப்பளவு 2500 சதுர மீட்டர்களுக்குள் உள்ளவற்றிற்கு உள்ளுர் திட்ட குழுமம் அனுமதி வழங்கலாம். முன்பு இதன் அளவு 1500 சதுர மீட்டராக இருந்தது.சிப்காட் / சிட்கோ கட்டடங்கள் தவிர, தொழிற்சாலைகள் கட்டடங்களும் 2500 சதுர மீட்டர் வரை உள்ளுர் திட்ட குழுமமே அங்கீகாரம் வழங்கலாம்.
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேருராட்சி பகுதிகளில் நில உட்பிரிவுகளுக்கான அனுமதி வழங்குவதற்கான உச்சவரம்ப 5 ஏக்கராக உயர்த்தப்பட்டுள்ளது. கிராமப்புற பகுதிகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் 10 ஏக்கராக உயர்த்தப்பட்டுள்ளது.
கோவை கிரெடாய் அமைப்பின் தலைவர் குகன் இளங்கோ,
“கோயம்புத்தூர் மற்றும் பிற நகரங்கள் வேகமான பொருளாதார வளர்ச்சி பெற அரசு எடுத்துள்ள சரியான முடிவு இது. விரைவான அனுமதி பெற்று பொதுமக்கள் பயன்பெற இது பேருதவியாக இருக்கும்.அரசின் இந்த முடிவை மனதார வரவேற்கிறோம்,” என்றார்.