August 14, 2021
தண்டோரா குழு
கோவை நேரு கல்வி குழுமம், ஈஷா யோகா மையம், கோவை பெடலர்ஸ் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மான்செஸ்டர் சார்பில் கிராம மக்களிடம் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு மற்றும் யோகாவினால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
கோவை நேரு கல்வி குழுமம், ஈஷா யோகா மையம், கோவை பெடலர்ஸ் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மான்செஸ்டர் ஆகியவை சார்பில் கோயம்புத்தூரை சுற்றியுள்ள கிராம பொதுமக்களிடம் கொரோனா நோய் தடுப்பூசி செலுத்துவது குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக சைக்கிள் பேரணி இன்று நடைபெற்றது.
இது குறித்து கோவை நேரு கல்வி குழமங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான டாக்டர். பி. கிருஷ்ண குமார் கூறியதாவது :-
இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் 100-க்கும் அதிகமாக கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், ஈசா யோகா மைய நிர்வாகிகள் மற்றும் கோவை பெடலர்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர். இந்த சைக்கிள் பேரணியானது சுண்டக்காமுத்தூர் ஐயப்பன் கோவில் முன்பு இருந்து காலை 6.30 மணிக்கு விழிப்புணர்வு பாதகைகளுடன் கூடிய சைக்கிள்களில் புறப்பட்ட அவர்கள் சுமார் 75 கி.மீ தூரத்தை பேரூர், மாதம்பட்டி,ஆலாந்துறை, காருண்யா, இருட்டுப்பள்ளம், செம்மேடு, நரசிபுரம் வழியாக ஈசா யோக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி திருஉருவ சிலை முன்பு காலை 8.30 மணிக்கு வந்தடைந்தனர். இதை தொடர்ந்து சிம்ம க்ரியா என்ற ஈஷாவின் எளிய யோகா பயிற்சியை மேற்கொண்டனர்.
பின்பு ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று அங்குள்ள பொது மக்களிடம் கொரோனா நோயிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, அப்படியும் கொரோனா தொற்று வந்ததால் அதை எவ்வாறு எதிர்கொண்டு சரியான முறையில் மற்றவர்களுக்கு பரவாமல் சிகிச்சை எடுத்துக் கொள்வது மற்றும் கொரோனா தடுப்பூசியால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்பாடாது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் போன்ற விழிப்புணர்வுகளை துண்டு பிரசுரங்கள் மூலம் விளக்கினார்கள். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு கோவை புதூருக்கு மீண்டும் சைக்கிளில் சென்றனர்.
அவர்கள் பல்வேறு கிராமங்கள் வழியாக பயணித்து மக்களிடம் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து சத்குரு கூறும் போது :-
மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா தொற்றிலிருந்து பொது மக்களை எப்படி பாதுகாப்பது, எவ்வளவு விரைவாக தடுப்பூசி செலுத்துவது போன்ற பயற்சிகளை சிறப்பாக எடுத்துவருவது பாராட்டத்தக்கது. கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள யோகா பயிற்சியும் ஒரு சிறந்த தடுப்பு முறைதான். யோகாவினால் உடல் ஆரோக்கியம் எற்படுவதுடன் எளிமையான முறையில் மூச்சுவிடவும் உதவுகிறது. தினமும் 20 நிமிடங்கள் யோகா செய்தால் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை ஈஷா யோகாவில் நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சியில் ஆதியோகி சிலை முன்பாக சுமார் 50 நபர்கள் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சிம்ம க்ரியா என்ற எளிய யோகா பயிற்சியை ஈஷா யோகா ஆசிரியர்கள் மூலம் பயிற்சியை மேற்கொண்டனர். இந்த பயிற்சியை தினசரி மேற்கொண்டால் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கலாம்.
இதை தொடர்ந்து கோவை ராசி மருத்துவமனையின் சார்பில் ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள பொது மக்களுக்கு இலவச கொரோனா நோய் தொற்று தடுப்பூசி போடப்பட்டது.
முன்னதாக கோவைப்புதூரில் துவங்கிய சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை கோயம்புத்தூர், சுகாதாரத்துறை, இணை இயக்குனர், டாக்டர். பி. அருணா கொடியசைத்து துவக்கிவைத்தார். துவக்க விழாவிற்கு நேரு கல்வி குழமங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான டாக்டர். பி. கிருஷ்ண குமார் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்டம் 3201 மாவட்ட இயக்குனர் ரோட்டேரியன் எம்பிஎச்எப் பி. குமரேஷன், உதவி அணையாளர் ரோட்டேரியன் என். ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கோயம்புத்தூர் மாவட்ட சைக்கிளிங் அசோசியேசன் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஆர்.எஸ். விக்னேஷ் ராம்குமார், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மான்செஸ்டர் தலைவர் ரோட்டேரியன் பொறியாளர் மகேந்திரன் ராகவன் மற்றும் செயலாளர் ரோட்டேரியன் என். ரகுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். பேரணியில் கலந்து கொண்ட அனைவரும் முகக்கவசம் மற்றும் தலைக்கவசம் அணிந்து பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.