August 13, 2021
தண்டோரா குழு
கோவை வ.உ.சி மைதானத்தில்
நடைபெறவுள்ள சுதந்திர தினவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவை மாவட்ட ஆட்சியரின் முகநூல் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
கோவை வ.உ.சி மைதானத்தில் வரும் 15ம் தேதி நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் காலை 9.05 மணிக்கு ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தேசிய கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்த உள்ளார்.இதைத்தொடர்ந்து, கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், மருத்துவர்கள், முன்களப் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
கொரோனா தொற்றால் நிலவும் சூழ்நிலையினை கருத்தில் கொண்டு, சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களை கௌரவிக்கும் பொருட்டு அவரவர் வீட்டிலேயே, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் நிலையில் உள்ள அலுவலர்கள் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். இந்தாண்டு, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், கோவை மாவட்ட ஆட்சியரின் முகநூல் பக்கத்தில் வ.உ.சி மைதானத்தில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் பொருட்டு சுதந்திர தின விழாவை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் வீட்டிலிருந்தே காணலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.