August 9, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி வடக்கு மண்டல பகுதிகளில் இயங்கி வரும் சிறு, குறு தொழில்சாலைகளை மாலை 5 மணிக்கு மேல் இயக்கக்கூடாது என மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருவதை தடுத்து நிறுத்த கோரி மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கராவிடம் டாக்ட் சங்கம் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து டாக்ட் சங்க மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக மாலை 5 மணிக்கு மேல் அத்தியாவசிய கடைகளை தவிர்த்து வாத்தக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்படுகிறது.அதே போல் ஞாயிறுக்கிழமைகளில் மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் மாலை 5 மணிக்கு மேல் கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் தொழில்சாலைகளை மாநகராட்சி அதிகாரிகள் அடைக்க சொல்லியும், அபராதம் வசூலித்தும், அச்சுறித்தியும்வருகின்றார்கள்.
இதனிடையே வடக்கு மண்டல பகுதிக்கு உட்பட்ட 45 வது வார்டு ரத்தினபுரியில் இயங்கி வரும் தனியார் இன்ஜினியரிங் கம்பெனியில் மாநகராட்சி அதிகாரிகள் ரூ.500 அபராதம் விதித்துள்ளனர். தொழிற்சாலைகள் மேல் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரும் வடக்கு மண்டல அதிகாரிகளிடம் இருந்து இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.