July 28, 2021
தண்டோரா குழு
அதிமுக அரசு கொண்டுவந்த பல திட்டங்களை ரத்து செய்துள்ளதால் கையாலாகாத அரசாக திமுக அரசு உள்ளது என முன்னாள் அமைச்சர் எஸ். பி.வேலுமணி சாடியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலின் போது திமுக சார்பில் அளிக்கப்பட்ட பெட்ரோல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் தலைமையினான அரசு நிறைவேற்றவில்லை என அதிமுக தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் வெற்றிக்காக வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக அரசுக்கு எதிராக கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்திருந்தது.
அதன்படி இன்று அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அவரவர் வீட்டு வாயிலில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அரசுக்கு எதிராக கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தேனியிலும், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும் ஆளும் அரசுக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
அந்த வகையில் கோவை குனியமுத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே முன்னாள் அமைச்சரும், தற்போதைய தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ் பி வேலுமணி தலைமையில் திரண்ட 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கையில் கருப்பு கொடி மற்றும் தேர்தலில் திமுக அறிவித்த வாக்குறுதிகள் என்ன ஆனது என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன், ஆளும் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினர் பலர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக கருப்புச்சட்டை அணிந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர்,
ஆட்சியில் அமர்ந்ததும் பல்வேறு திட்டங்களை அறிவித்து திமுக அரசு எதையும் செயல்படுத்த வில்லை எனவும், அறிவித்த திட்டங்களை கண்டுகொள்ளாத அரசு அதிமுக அரசு இருக்கிறது எனவும் குற்றம் சாட்டினார். நீட் தேர்வு ரத்து செய்வோம் எனக் கூறிய திமுக அதற்கான முயற்சியை எடுக்காமல் இருக்கிறது எனவும், குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு, மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க வில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
கொரோனா நோய்த்தொற்று கடுப்பில் திமுக அரசு வந்த பின் ஒவ்வொரு ஊரிலும் 50 முதல் 60 பேர் வரை இறந்துள்ளதாக குற்றம் சாட்டிய அவர், கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டது எனவும், டெல்லியில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் பிரதமரை சந்தித்து தடுப்பூசி வழங்க கோரிக்கை விடுத்ததாகவும் கூறினார். திமுக அரசு மக்கள் பணிகளை செய்யாமல் விட்டுவிட்டு பொய் வழக்கு போடுவது காவல்துறை மூலம் மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது எனவும், காவல்துறையினர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
காவல்துறையின் மிரட்டலுக்கு அதிமுகவினர் பயப்பட மாட்டார்கள் எனவும், அதிமுக அரசு கொண்டு வந்த பல திட்டங்களை ரத்து செய்ததால் திமுக அரசு கையாலாகாத அரசாக இருக்கின்றது எனவும் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்தார்.