July 26, 2021
தண்டோரா குழு
கடை வாடகை நிலுவை தொகையை தவணை முறையில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை தியாகி குமரன் மார்க்கெட் அனைத்து காய்கனி வியாபாரிகள் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை தியாகி குமரன் மார்க்கெட் அனைத்து காய்கனி வியாபாரிகள் சங்க தலைவர் ராஜேந்திரன் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 18 மாதங்களாக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் வியாபாரம் செய்வதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக அழுகும் பொருட்கள் வியாபாரம் செய்யும் நாங்கள் மிகுந்த பொருளாதார பாதிப்பில் உள்ளோம். எனவே வியாபாரிகள் அளிக்க வேண்டிய கடை வாடகை மற்றும் பிற நிலுவை தொகைகளை தவணை முறையில் செலுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலுவை தொகைக்கான வட்டியை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மார்க்கெட் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்காக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மீது எடுக்கப்படும் சட்ட ரீதியிலான நடவடிக்கையை தவிர்க்க, உரிய வாகன நிறுத்த வசதி ஏற்படுத்தி தர வேண்டும். 25 ஆண்டுகளுக்கு முன் தீ விபத்தின்போது துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை புனரமைத்து மார்க்கெட்டுக்கு உரிய குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.
கூடுதலான அளவில் தூய்மை பணியாளர்களை நியமித்து நாள்தோறும் இருமுறை குப்பைகளை அகற்றி சுகாதாரம் பேண வேண்டும். மின் விளக்குகளை பராமரிப்பு செய்து தர வேண்டும். மார்க்கெட்டை நம்பி பிழைக்கும் 3 ஆயிரத்துக்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.