July 23, 2021
தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையில் ஹீமோபிலியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
கோவை அரசு மருத்துவமனையில் ஹீமோபிலியா சிறப்பு சிகிச்சை மையம் உள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் ஹீமோபீலியா ரத்த குறைபாடு உள்ளவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு தடுப்பூசி மையம் நடைபெற்றது. இந்த முகாமை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர் அவர் இதுகுறித்து கூறுகையில்,
கோவை மாவட்டத்தில் ஹீமோபிலியா என்ற ரத்த குறைபாட்டினால் 350 பேர் உள்ளனர். அதில் 250 பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். இந்நிலையில் ஹீமோபீலியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் தடுப்பூசி செலுத்தும் போது ரத்த கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால் அதனை தடுக்க அவர்களுக்கு பேக்டர் 8 அண்டு 9 என்ற மருந்து செலுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அதன் பிறகு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதன் மூலம் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு ரத்தக்கசிவு ஏற்படவில்லை. இன்று ஒரே நாளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் 50 நோயாளிகள் மற்றும் அவர்களை கவனிப்பவர்கள் 50 பேர்களுக்கும் என 100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது, என்றார்.