July 23, 2021
தண்டோரா குழு
கோவை மின் பகிர்மான வடக்கு வட்டத்தில், ஐ.டி.ஐ. கல்வி பயின்றவர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சிக்கான நேர்காணல் ஆகஸ்ட் 4 ம் தேதி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கோவை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
கோவை மின் பகிர்மான வடக்கு வட்டத்திற்கு உள்பட்ட அலுவலகங்களில் ஒரு வருட கால ஐ.டி.ஐ., தொழிற் பழகுநர் பயிற்சிக்கு 70 ஒயர்மேன், எலெக்ட்ரீசியன்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேற்படி, நேர்காணல் நடத்துவதற்காக கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து 350 ஐ.டி.ஐ., ஒயர்மென், எலக்ட்ரீசியன் கல்வி பயின்றவர்களின் பட்டியல் பெறப்பட்டுள்ளது.
அப்பட்டியலில் உள்ள அனைவருக்கும் நேர்காணல் கடிதங்கள் அனுப்பப்பட்டு, அரசு விதிமுறைகளுக்கு உள்பட்டு தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி, கோவை டாடாபாத் பகுதியில் அமைந்துள்ள மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் வருகின்ற ஆகஸ்ட் 4 ஆம் தேதி, தொழிற்பழகுநர் பயிற்சிக்கான நேர்காணல் நடக்கிறது.
இதில் பங்கேற்க வருவோர், கல்வி சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக அட்டை, மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றின் உண்மை மற்றும் நகல்களுடன் நேரில் கலந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே தொழில் பயிற்சியை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மேற்கொண்டவர்கள் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.