July 21, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் 7,008 மாணவ, மாணவிகள் புதிதாகச் சேர்ந்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 17 மேல்நிலைப்பள்ளிகள், 10 உயர்நிலைப் பள்ளிகள், ஒரு நடுநிலைப்பள்ளி, 13 உயர் தொடக்கப்பள்ளிகள், 42 ஆரம்பப்பள்ளிகள், காது கேளாதோருக்கு ஒரு சிறப்புப் பள்ளியும் செயல்பட்டு வருகின்றன.இப்பள்ளிகளில் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.
உயர் தொடக்கப்பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி.வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போர்டு வசதியுடன் கூடிய வகுப்பறைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், தூய்மையான மற்றும் சுகாதாரமான கழிப்பறைகள், ஆய்வகங்கள், கணினி ஆய்வகங்கள், மற்றும் நூலக வசதிகள் உள்ளன. தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் கற்பித்தல் பணி நடைபெற்று வருகிறது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் யாவும் மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவர்களும் வழங்கப்படுகின்றன. கரோனா பரவல் காரணமாக பள்ளியில் சென்று பயில முடியாத சூழலிலும் இணையவழி வகுப்புகள் மூலமாக கற்பித்தல் நடைபெறுகிறது. கல்வித் தொலைக்காட்சி வாயிலாகவும் கற்பித்தல் நடைபெறுகிறது.
கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 2021 – 2022 ஆம் கல்வியாண்டில் ஆரம்பப் பள்ளிகளில் 2,220, நடுநிலை மற்றும் உயர் தொடக்கப்பள்ளிகளில் 1,011, உயர்நிலைப் பள்ளிகளில் 570, மேல்நிலைப் பள்ளிகளில் 3,207 என மொத்தம் 7,008 மாணவ, மாணவிகள் புதிதாகச் சேர்ந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.