July 20, 2021
தண்டோரா குழு
கோவை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள், சிகிச்சை முறைகள் குறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை கணபதி, வெள்ளக்கிணறு பகுதிகளில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள், சிகிச்சை முறைகள், தாய் சேய் நல பாதுகாப்பு அட்டையில் அதன் விபரங்கள் பதிவு செய்து பராமரிப்பது, அதனை கணினியில் பதிவேற்றம் செய்யப்படும் பணிகள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி முகப்பேறு திட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது குறித்து மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.
இதை தொடர்ந்து ஆவாரம்பாளையம் பகுதியில் கொசுவினால் ஏற்படும் நோய்களை தடுக்கும் நடவடிக்கைகளை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என முன்களப்பணியாளர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.மேலும்,பொதுமக்கள் குப்பைகளை சாலை மற்றும் சாலையோரங்களில் கொட்டாமல் குப்பைத்தொட்டியில் கொட்டவேண்டும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வில், மாநகராட்சி நகர் நல அலுவலர் ராஜா, வடக்கு மண்டல உதவி கமிஷனர் மோகன சுந்தரி, செயற்பொறியாளர் செந்தில் பாஸ்கர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.