July 14, 2021
தண்டோரா குழு
பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்க கோவையில் இருந்து சென்னை வரை சாலை மார்கமாக செல்லும் அண்ணாமலையை பாஜக தொண்டர்கள் கோவையில் உற்சாகதோடு அனுப்பி வைத்தனர்.
பாஜகவின் தமிழக தலைவராக அண்ணாமலை ஐ.ஏ.எஸ் வருகின்ற 16ஆம் தேதி பொறுப்பேற்க உள்ள நிலையில் இன்று கோவையில் இருந்து சென்னை வரை சாலை மார்க்கமாக செல்ல முடிவெடுக்கப்பட்டு இன்று கோவையில் இருந்து புறப்பட்டார்.அதற்கு முன் கோவை தண்டு மாரியம்மன் கோவிலுக்கு சென்ற அவர் சாமி தரிசனம் செய்துவிட்டு தனது பயணத்தை துவக்கினார்.
அவருக்கு வ.உ.சி மைதானம் அருகே சுமார் 300க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் மலர் தூவியும் உற்சாகத்தோடு அனுப்பி வைத்தனர். அப்போது அங்கிருந்த அனைத்து தொண்டர்களும் பாரத் மாதாஹீ ஜே என்று முழக்கங்களோடும் ஜெய்ஹிந்த் என்ற முழக்கங்களோடும் வழியனுப்பி வைத்தனர்.
அப்போது பாஜக தொண்டர்களிடையே பேசிய அவர்,
வருகின்ற 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரும் போது பாஜக ஒரு மாற்று சக்தியாக இருக்கும் பாராளுமன்றத்திற்கு அதிக எம்பி க்கள் செல்வார்கள் என்ற நம்பிக்க உள்ளது. நமது கொள்கைகளை ஒவ்வொரு வீடாக கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
வருகின்ற 16ஆம் தேதி சென்னையில் உள்ள கமலாலயத்தில் பொறுப்பேற்க உள்ளோம். இதனால் இன்று கோயம்புத்தூர் நமது வசிப்பிடத்தில் இருந்து சாலை மார்க்கமாக செல்ல இருக்கிறோம். போகின்ற வழியில் கட்சியினுடைய முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்களை சந்தித்து கொண்டு செல்கிறோம். கொரோனா காலம் என்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு சென்னையில் பொறுப்பேற்க இருக்கின்றோம். தமிழக பாஜக விற்கு சிறப்பாக செயல்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
பாஜகவை பொருத்தவரை மற்ற கட்சிகளை போன்று தனிமனித கட்சி அல்ல. நமது கட்சியில் ஒரு பக்கம் அனுபவம் இருக்கிறது. ஒரு பக்கம் இளமை இருக்கிறது. இரண்டும் சேர்த்து கூட்டாக செயல்படுவோம் என்றார்.