• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜி.எஸ்.டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பட வேண்டும் – காட்மா கோரிக்கை

July 13, 2021 தண்டோரா குழு

தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியிடம் கோயமுத்தூர் திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) சார்பில் நேற்று அளிக்கப்பட்டது

அம்மனுவில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசால் விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி வரியில், லேபர் சார்ஜ் அடிப்படையில் ஜாப் ஒர்க்கில் ஈடுபடும் தொழில் முனைவோருக்கான வரி விதிப்பு 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும். தற்போது ஜிஎஸ்டி கவுன்சிலால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள,ஒரு பொருளை விற்பனை செய்த விற்பனையாளர் மாதம் 11-ம் தேதிக்குள் தங்களது ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்யாவிடில், பொருளை வாங்கிய வாடிக்கையாளர் அவர் செலுத்திய ஜிஎஸ்டி வரியை உள்ளீட்டு வரியாக எடுக்க இயலாது என்ற விதிமுறை திரும்ப பெறப்பட வேண்டும்.

தொழில் முனைவோர்கள் ஜி.எஸ்.டி வரி செலுத்தாமல் ஏமாற்ற வேண்டும் என நினைப்பதில்லை.ஆனால் நடைமுறையில் ஒரு குறுந்தொழில் முனைவோர் தாம் செய்யும் வேலைக்கு பில் போடும்போது அதற்குரிய கட்டணத்தை வாடிக்கையாளரிடமிருந்து பெறுவதற்கு 90 முதல் 180 நாட்கள் வரை கால தாமதம் ஆகிறது. ஆனால் இந்த பில்களுக்கான ஜி.எஸ்.டி வரியை மாதம் 20-ம் தேதிக்குள் தொழில் முனைவோர் செலுத்த வேண்டியுள்ளது.

வாடிக்கையாளரிடமிருந்து தொகை கிடைப்பதற்கு காலதாமதம் ஆனாலும் கூட தொழில் முனைவோர் அதற்கான ஜி.எஸ்.டி வரியை உரிய காலத்துக்குள் செலுத்தி விட வேண்டியிருப்பதால் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.கடன் தவணை மற்றும் வட்டியை கூடுதலாக ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டியிருப்பதால், தொழில் முனைவோரின் முதலீடு வெகுவாக குறைந்து வருகிறது.

மேலும் தாமதமாக ஜி.எஸ்.டி வரி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு தற்போது விதிக்கப்படும் வட்டி மற்றும் அபராத தொகையும் அதிகமாக உள்ளது.இதில் வட்டியோ, அபராதமோ இல்லாமல் ஜி.எஸ்.டி நிலுவை தொகையை மட்டும் செலுத்தி தொழில் முனைவோர் தங்களது தொழிலை தொடர அனுமதித்தால் பேருதவியாக இருக்கும்.ஒரு தொழில் முனைவோர் தங்களது கணக்குகளை தாக்கல் செய்து, ஆன்லைன் ரிடர்ன் தாக்கல் செய்த பிறகு அதில் ஏதாவது தவறு இருக்கும்பட்சத்தில், அந்த கணக்கில் உள்ள தவறினை அடுத்த மாதம் மட்டுமே சரி செய்ய முடியும் என்பதை தளர்த்தி, உடனடியாக சரி செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, தொழில் தொடங்குவதற்கான பதிவு சான்றிதழ் ஆன்லைனில் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அதிகாரிகள் தொழில் கூடங்களுக்கு வந்து ஆய்வு செய்த பிறகே பதிவு சான்று வழங்கப்படுகிறது. இது காலதாமதத்துக்கு வழிவகுக்கிறது என்பதால் முன்பை போலவே ஆன்லைனில் பதிவு சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இதுபோன்ற ஜி.எஸ்.டி-யில் உள்ள தொழில்களை பாதிக்கும் நடைமுறை மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும். இதை ஜி.எஸ்.டி கவுன்சிலின் கவனத்துக்கு கொண்டு சென்று தொழிலையும், தொழில் முனைவோரையும் காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க