July 13, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசியில் குறைந்தபட்சம் பத்து சதவீதமாவது தனி ஒதுக்கீடு செய்து
தொழிலாளர்களுக்கும்,தொழில் முனைவோர்களுக்கு வழங்க வேண்டும் என டாக்ட் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து டாக்ட் சங்க மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியிருப்பதாவது:
தொழில் நகரமான கோவையில் ஜாப் ஆர்டர்கள் மட்டும் செய்து கொடுக்கும் குறுந்தொழில் முனைவோர்கள் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.இவர்களிடம் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர்.எங்களது சங்கத்தின் மூலமாக தொழில் முனைவோர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு குறுந்தொழில் முனைவோர்களிடமும் 2 முதல் 10 பேர் வரை தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசியில் குறைந்தபட்சம் பத்து சதவீதமாவது தனி ஒதுக்கீடு செய்து தொழிலாளர்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கு வழங்க வேண்டும்.கேரளாவில் வைரஸ் தொற்றுகள் அதிகரிப்பதால் நமது மாவட்டத்தில் தொழில் முனைவோர் மற்றும் தொழிலாளர்கள் நலனில் கவனம் செலுத்தி தடுப்பூசி ஒதுக்கீட்டில் தனி ஒதுக்கீடு செய்து, தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்களது கோரிக்கையை மாவட்ட கலெக்டர் , மாவட்ட சுகாதாரத் துறையினர் மற்றும் மாவட்ட தொழில் மைய அதிகாரிகளிடம் முன்வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார் .