July 12, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி வடக்கு மண்டல பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள், தூய்மை பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை பீளமேடு அருகே பயனியர் மில் சாலை நகர்ப்புற ஆரம்ப சுகாதார அலுவலக வளாகத்தில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் முன்களப்பணியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில், வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சல், இருமல் போன்ற பரிசோதனை செய்து சேகரிக்கப்பட்ட பரிசோதனையின் விபரங்களை பதிவேடுகளில் பதிவு செய்திட வேண்டும்.
களப்பணி மேற்கொள்ளும்போது முகக்கவசம் அணிந்தும், கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திட வேண்டும்.அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், என தெரிவித்தார். பின்னர் கொசுவினால் ஏற்படும் நோய்களை தவிர்க்க, கொசுக்களை ஒழிக்க பழைய டயர், தூக்கி வீசியெரியப்பட்ட பொருட்கள், பிளாஸ்டிக் கேன்களில் போன்றவற்றில் தண்ணீர் சேராத வண்ணம் பார்க்க வேண்டும். தேவையற்ற அதுபோன்ற பொருட்களை அகற்றிட வேண்டும்.
வீட்டில் உபயோகப்படுத்தாத கழிவறைகளில் கொசு உற்பத்தி செய்ய வாய்ப்புண்டு. அம்மாதிரியான கழிப்பிடங்களை சுத்தம் செய்த பின்னர், மூடி வைக்க வேண்டும் என முன்களப்பணியாளர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து பொன்னி நகர் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு, அதன் தரத்தினை குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது வடக்கு மண்டல உதவி கமிஷனர் மோகனசுந்தரி, செயற்பொறியாளர் பார்வதி, உதவி செயற்பொறியாளர் செந்தில் பாஸ்கர், மண்டல சுகாதார அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.